வடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் போட்டியிடுவேன் | தினகரன்

வடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் போட்டியிடுவேன்

- மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

வடகிழக்கு இணைந்ததாக மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாண சபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”சமகால அரசியலிலே மிக முக்கியமான பிரச்சினையாக தமிழ் அரசியல்வாதிகளின் மத்தியிலும்,முஸ்லிம் அரசியவாதிகளின் மத்தியில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்ட விடயம் இப்போதும் பேசு பொருளாகவும்,மிகவும் சூடாகவும் பேசப்பட்டிருந்தமை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கடந்த வாரம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக தரம் குறைத்து பெயர் மாற்றி சமல் ராஜபக்ஷவின் அமைச்சின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டமையை நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது.

இந்தவிடயமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடம், தமிழ்தேசிய கூட்டமைப்பு நேரடியாக தெரியப்படுத்தி அதனை கதைத்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தரமாக ஒரு கணக்காளரை நியமித்திருந்தோம்.  அம்பாறை மாவட்டத்திலுள்ள சில சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும்,சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பதை மனதளவில் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் துரதிஸ்டவசமாக கணக்காளர் கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் சிலரின் சதித்திட்டத்தினால் தடுக்கப்பட்டு கணக்காளர் கடமையை பொறுப்பேற்கவில்லை என்பது, கல்முனை மக்களுக்கு மட்டுமன்றி ஒன்றுபட்ட தமிழ்,முஸ்லிம் மக்களுக்கும் கவலையை தந்திருந்தது.அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியும் மாறிப்போய் புதிய அரசாங்கத்தின் ஆட்சியும் வந்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைக்கும் பிரேரணையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதிதான் அதை நிறைவேற்றக்கூடாது என்றும்,செய்யக்கூடாது என்றும், காலப்போக்கில் நாங்கள் அதனை செய்வோம் எனக்கூறப்பட்டது. நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துள்ளோம் என்றும்,கிழக்கிலே தமிழர்,முஸ்லிம்கள் ஒற்றுமைப்படக்கூடாது என்பதற்காகவும்,கிழக்கில் தமிழர்களின் இருப்பு பறிமுதல் செய்யப்படுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் என பேசியவர்கள், இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டதற்கு பேசாமல் இருப்பது கவலையளிக்கின்றது.

மாகாண சபை தேர்தல் நடப்பதற்கான எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. வடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் நான் போட்டியிடுவேன்” என்றார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...