ரிசாட் பதியுதீன் எம்.பியை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  இப் போராட்டம் வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் நேற்றுக் காலை 9மணியில் இருந்து 10மணிவரை இடம்பெற்றது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் எனவும், ரிஷாட் பதியதீன், அசாத்சாலி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அரசுக்கு ஆதரவு வழங்காததற்காக இந்த கைதா, சிறுபான்மை தலைமைகளை விடுதலை செய், அரசே உண்மையான சூத்திரதாரிகளை கைது செய், தமிழ் பேசும் உறவுகளே அநீதியான கைதுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்போம், இன, மத பாகுபாடு இன்றி பணியாற்றிய சேவகனை விடுதலை செய்,சிறுபான்மையினரின் குரலை விடுதலை செய், என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோசமும் எழுப்பினர். 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப், ரி.கே. இராஜலிங்கம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாள்ர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா விசேட நிருபர்


Add new comment

Or log in with...