2 வருடமாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை; சாராவுக்கு என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது

- அமைச்சர் சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஒருவரின் மனைவி எனக் கருதப்படும் சாரா ( புலத்சினி ராஜேந்திரன்) இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதற்கான வாய்ப்பில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.  சாய்ந்தமருதில் குண்டுவெடிப்பு இடம்பெற்று இரண்டு வருடங்களாகியுள்ள போதிலும் சாராவுக்கு என்ன நடந்தது? என்பது மர்மமாகவே உள்ளதென அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாங்கள் திட்டமிட்டுள்ள இரண்டாவது மரபணு பரிசோதனை மிகவும் கடினமானதென தெரிவித்துள்ள அமைச்சர், சாரா இறந்துவிட்டாரா? அல்லது இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளாரா? என்பதை உறுதிசெய்வதற்காக புதைக்கப்பட்டுள்ள பெருமளவு உடல்பாகங்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டியிருக்குமென தெரிவித்துள்ளார். 

நிசார் என்ற சாட்சியொருவர் சாரா புலத்சினிஎன்ற தமிழ் பெண் இஸ்லாமிய மதத்திற்கு மாறி கட்டுவாப்பிட்டிய தற்கொலைக் குண்டுதாரி ஹஸ்துன் என்பவரை திருமணம் செய்தார். அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டாரென குறிப்பிட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஆனால் இதுவரையில் எதுவும் நிரூபிக்கப்படவில்லையென தெரிவித்துள்ள அமைச்சர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாரா தப்பிச் செல்வதற்கு உதவியதை தான் பார்த்ததாகவும் நிசார் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சாட்சியமளித்த ஒருவர்இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆனால் சிசிடிவி கமரா காட்சிகளோ அல்லது வேறு எந்த ஆதாரமோ இல்லை. அவர் பொய் கூறியிருக்கிறார் எனக் கருதுகின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவரவிரும்புகின்றேன். இந்திய புலனாய்வுத் துறையை அணுகியுள்ளோம். அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

வேறு எந்த ஆதாரங்களுமில்லை. இதன் காரணமாக நாங்கள் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாத நிலையிலுள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஒருசில செகண்ட்களில் அவர் தப்பியிருக்கலாம் ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார் என்றே நாங்கள் கருதுகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...