பல்துறை ஆளுமையாளன் க. உஷாந்தன் | தினகரன்

பல்துறை ஆளுமையாளன் க. உஷாந்தன்

வட புலத்தின் கலைசார் ஆளுமை வெளி என்பது பரந்துபட்டது. அப்டியான அந்த கனதிமிகு வெளியில் நம் பிரதேசத்தின் இளவல்கள் பலரும் தத்தம் துறை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் நல்லதொரு பேச்சாளனாய், ஊடகவியலாளராய், பலநூறு அரங்குகள் கண்ட பட்டிமன்ற பேச்சாளராய் என சமகாலத்தில் நன்கு அறியப்பட்டவர் க.உஷாந்தன் அவர்கள்.

மானிப்பாய் மண்ணைச் சேர்ந்த க.உஷாந்தன் அவர்களை  இன்றைய நிலையில் காண்பிய ஊடகவெளி வாயிலாக தாயக புலம்பெயர் உறவுகள் அறிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை எனச் சொல்லும் அளவிற்கு காண்பிய ஊடகமொன்றின் கனதியான ஆளுமை மிக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராய் நன்கு அறியப்பட்ட ஒருவர் இவராவார். சரளமாக தமிழ் நாவில் விளையாடும் அளவிற்கு சிறுபராயம் முதல் தன்னை வளர்த்துக் கொண்ட உஷாந்தன் அவர்கள் தனது ஆரம்பம் பற்றி பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

தன்னுடைய இன்றைய நிலைக்கு பிரதானமான காரணிகளே தன்னுடைய குடும்பத்தினர் என்றார். மானிப்பாய் சோதி வேம்படி வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வியைப் பயின்ற காலத்தில் தரம் 04இல் பயில்கின்ற போதே தேசிய மட்ட தமிழ்த் தினப் போட்டியில் கலந்து கொண்டார்.

இதற்கு முன்னரே நான்கு வயதில் இருந்தே தனது பேச்சுக்கலையைத் தான் ஆரம்பித்ததாகவும், சிறுவயது முதலாக தனது போட்டிகள் அனைத்திற்கும் உந்துதலாக இருந்தவர்கள் தனது அப்பா, அம்மா, அப்பாவழி சகோதரியான மாமி ஆகியோர் எனக் குறிப்பிட்டார். அத்தோடு, இவர்கள் அனைவரும் தனது போட்டி இடம்பெறும் அனைத்து இடத்திற்கும் வருகை தந்து தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் கூறினார்.

உஷாந்தன் அவர்களை ஓர் ஆளுமை மிக்க பேச்சாளனாய் புடம் போட்டதில் யாழ். இந்துக் கல்லூரிக்கு மகத்தான பங்குண்டு. த‌ரம் 06இல் இந்தப் பாடசாலையில் இணைந்து கொண்ட இவர் பாடசாலையில் வெள்ளிப் பிரார்த்தனை நிகழ்விற்காக தற்செயலாக களமிறக்கப்பட்டதன் விளைவே தனது கலைத்துவ வெளியில் மிகப் பிரதானமான இடம் என்கிறார்.

இன்றைய நிலையில் பல விவாத‌ அரங்கப் போட்டிகளின் வாயிலாக பல பேச்சாளர்கள், இன்னும் பலர் என பலரை உருவாக்கிய யாழ். இந்துக் கல்லூரிக்கு உஷாந்தன் ஒரு வரலாற்றுப் பரிசையும் கொடுத்திருக்கிறார். 30வருடங்களிற்குப் பின்னர் தேசிய மட்ட விவாத சுற்றுப் போட்டியில் இவர் தலைமையிலான அணி வெற்றி பெற்று இந்து அன்னைக்கு பெருமை தேடித் தந்தவராகவும் இவர் மிளிர்கின்றார்.

தரம் 06இல் ஞானதேசிகன் ஆசிரியரின் ஊக்குவிப்பும், பட்டிமன்றம் போன்றவற்றிற்கு தமிழ் சிவராஜா ஆசிரியர் மற்றும் சற்குணராஜா போன்றவர்கள் தன்னுடைய கலைப்பணியின் கலங்கரை விளக்குகள் என நன்றி கலந்த பெருமிதத்தோடு க.உஷாந்தன்  கூறினார்.

அத்தோடு, க.உஷாந்தன்  க.பொ.த உயர்தரம் படிக்கின்ற போது தன்னைப் பட்டி மன்றம், விவாதம் போன்றவற்றிற்கு ஆலயங்கள், பொதுவிடங்கள் என அனைத்திற்கும் கொண்டுச் சென்றவர்கள்

இரா. செல்வவடிவேல் மற்றும் வரணி சிவராஜா ஆகியோரே என அவர்களையும் சேர்த்து நன்றி கூர்ந்தார்.

ஊடகப் பரப்பைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் சில பத்திரிக்கைகளிற்கான ஆக்கங்கள் செய்திகள் போன்றவற்றை எழுதிக் கொண்டிருந்த உஷாந்தன் தன்னை ஒரு பல் பரிமாணப் படைப்பாளியாகக் காட்டிக் கொள்ளக் கூடிய பல செயற்பாடுகளையும் ஆற்றியிருக்கின்றார்.

ஆரம்பத்தில் இணைய வானொலி ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் காண்பிய ஊடக பிரவேசம் வாயிலாகவே அநேகரின் கவனத்தை பெறத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டு கலைஞரும், கவிஞருமான சுதுமையூர் தினேஷ் ஏகாம்பரத்தின் தொடர்பு காரணமாக, அவரூடாக காண்பிய ஊடகமொன்றிற்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக தடம் பதித்ததாகக் கூறும் உஷாந்தன் இந்த ஊடகப் பிரவேசம் என்பது ஒரு விபத்து எனக் கூறுகின்றார்.

இன்று தாயக புலம் பெயர் உறவுகள் அனைவராலும் ரசிக்கப்படும் அளவிற்கு ஓர் ஊடகத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அதே ஊடகத்தில் வானொலி அறிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2012இல் நடாத்திய தமிழ் பேச்சு மற்றும் தமிழ் அறிவிப்புப் போட்டியில் முதலாம் இடத்தைத் தேசிய ரீதியாகப் பெற்றுக் கொண்ட பெருமையும் இவரையே சாரும். முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

கவிதை, பாடல் போன்றவற்றையும் எழுதக் கூடிய திறன் படைத்தவரான இவர் மானிப்பாய் மருதடிப் பிள்ளையாரை போற்றுகின்ற இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளார்.

நடிப்புத் துறை சார்ந்து நாடக நெறியாளர் தர்மலிங்கம் அவ்ரகளின் சமூக விழிப்புணர்வு நாடகங்கள், குறும்படங்கள் ஆகியவற்றிலும் தன்னுடைய திறமையை நிரூபணம் ஆக்கியுள்ளார்.

இன்றைய நிலையில் பல்துறை சார்ந்தும் பணியாற்றிக் கொண்டு தன்னை ஒரு சமூக சேவகனாகவும் மாற்றி பல உதவித் திட்டங்களையும் ஆற்றிக் கொண்டு மொழி சார்ந்து பல விடயங்களை, ஆற்றுகைகளை, ஊடகப் பணியுடனாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பல்துறை ஆளுமையாளன் க.உஷாந்தனனின் கலை வாழ்வு இன்னும் இன்னும் திறம்படும் என்பதில் ஐயமில்லை.

வெற்றி துஷ்யந்தன்


Add new comment

Or log in with...