ரிஷாட், ரியாஜ் பதியுதீன் 90 நாள் தடுப்புக் காவலில்

ரிஷாட், ரியாஜ் பதியுதீன் 90 நாள் தடுப்புக் காவலில்-Rishad Bathiudeen & Riyaj Bathiudeen Detained for 90 Days

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ பதியுதீன் ஆகியோரை இன்று முதல் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தும் அனுமதியை பெற்றுள்ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு உதவி, ஒத்தாசைகளைப் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பியுமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் CIDயினரால் கடந்த சனிக்கிழமை (24) கைது செய்யப்பட்டிருந்தனர்.

ரிஷாட் பதியுதீன் எம்.பி, கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் வைத்தும், ரியாஜ் பதியுதீன் வெள்ளவத்தை பிரதேசத்திலும் வைத்தும் கைது செய்ய்யப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர் அவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 6 (1) பிரிவின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், இன்றைய (27) தினம் குறித்த காலப் பகுதி நிறைவடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 9 (1) பிரிவின் கீழ் மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய CID யினர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த, அஜித் ரோஹண, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறித்த இருவர் தொடர்பிலும் பல்வேறு சாட்சியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...