'முடக்கத்தான்' கவிதை நூல் தனித்துவமும் முதிர்ச்சியும் மண் வாசனையும் கொண்டது | தினகரன்

'முடக்கத்தான்' கவிதை நூல் தனித்துவமும் முதிர்ச்சியும் மண் வாசனையும் கொண்டது

பிரதேச இலக்கியங்கள் சிறுகதை, நாவல்கள் பற்றியே பேசுவதுண்டு அவற்றில்தான் பிரதேச மண் வாசனை அதிகமாக வெளிப்படக்கூடிய இயல்பு காணப்படுகின்றது என பேராசிரியர் செ.யோகராசா தெரிவித்தார்.

ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய முடக்கத்தான் கவிதை நூல் வெளியீடும் கவிதை உரை நிகழ்வும் ஒலுவில் கிறீன் வாசலில் மூத்தகவிஞர் சோலைக்கிளி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் முடக்கத்தான் நூல் பற்றி பேராசிரியர் செ.யோகராசா, பேராசிரியர் றமீஸ் அப்துல்லா ஆகியோர் உரையாற்றினார்கள்.

கலாநிதி யூ.எம்.மஜீட், கலாநிதி எஸ்.எம்.ஐயூப், எழுத்தாளர் எம்.அப்துல் றஸாக், ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். எழுத்தாளர் உமா வரதராஜன், கலாநிதி ஹனிபா இஸ்மாயில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில்  பேராசிரியர் செ.யோகராசா தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

முடக்கத்தான் கவிதைத் தொகுதி பற்றிய மனப் பதிவுகளை இரண்டு அடிப்படைகளில் பகிர்ந்து கொள்ளமுடியும், .ஒன்று வஹாப்தீன் முன்பு வெளியிட்ட கவிதைத் தொகுப்புகளில் இருந்து இந்தத் தொகுப்பு எந்தஅளவுக்கு வித்தியாசப்படுகின்றது என்பதை கோடிட்டுக்காட்டுதல், இரண்டாவது சமகால ஏனைய கவிதைச் செல்நெறிகளில் இருந்து இந்தக் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் எவ்வாறு வித்தியாசப்படுகின்றன. என்பதைப் பற்றி கூறுவது.

வஹாப்தீனுடைய ஆறாவது கவிதைத் தொகுப்பு இது..அவரது முதலாவது கவிதைத் தொகுப்பு வேரில்லா பூச்சியங்கள் வழமைபோல ஏனைய கவிஞர்களுடைய முதல் தொகுப்பைப்போல பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இளங்கவிஞனின் முதல் தொகுப்புக்குரிய சிலசில குறைபாடுகளைக் கொண்டதாக வெளிவந்தது. அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு அஷ்ரப் எனும் தீ, மூன்றாவது வெட்டுக்கற்கள், குறும்பா கவிதைத் தொகுப்பு, நான்காவது கண்ணாடிக் குளத்தில் என்ற கவிதைத் தொகுப்பு சற்று வித்தியாசமாகவும் கனதியாகவும் வெளிவந்திருக்கின்றது..ஐந்தாவது வெயிலில் ஒரு வீரப்பழம் தொகுப்பில் உள்ள கவிதைகள் பிரதேச மணம் கமளுகின்ற ஒரு கவிதைத் தொகுப்பு.

அவ்வ்வறு அழுத்திக் கூறுவதற்குக் காரணம் பொதுவாக பிரதேச இலக்கியங்கள் சிறுகதை,நாவல்கள் பற்றித்தான் பேசுவதுண்டு. அவற்றில்தான் பிரதேச மண் வாசனை கூடுதலாக வெளிப்படக்கூடிய இயல்பு காணப்படுகின்றது.

ஆனால் கவிதைகளில் பிரதேச மண்வாசனை காணப்படுவதில்லை.அப்படி ப்பார்க்கும் போது வெயிலில் ஒருவீரப்பழம் என்ற தொகுப்புதான் முழுமையான நிலையைக் காட்டுகின்றது. அது முதல் முறையாக ஒலுவில் பிரதேச மண்வாசனையின் முழுமையான நிலையை வெளிஉலகத்திற்குக் காட்டுகிறது. அந்த பின்னணியில் தற்போது வெளிவந்துள்ள முடக்கத்தான் கவிதைத் தொகுப்பு வேறு இரு தளங்களிலே முதிர்ச்சிமிக்கதாக வெளிப்படுகின்றது. அந்த வகையில் முடக்கத்தான் கவிதைத் தொகுப்பு பல்வேறு தளங்களிலே வித்தியாசமாக தனித்துவம் மிக்கதாகவும் முதிர்ச்சி மிக்கதாகவும் ஒலுவில் பிரதேசத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும் ஒருநல்ல கவிஞனை இனங்காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றது. இந்த தொகுப்பு இரு வேறு தளங்களிலே இயங்குகிறது..ஒன்று நாம் எல்லோரும் அறிந்த கொரோனா வைரசும் அதனால் ஏற்பட்ட பல்வேறு விளைவுகளையும் காட்டுகின்றது..

இன்னொரு பகுதி கொரோனா வைரசைப் போல பயங்கரமான கொடுமையான வைரசாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு பாதிப்புத்தராத வேறு வைரசுகளைப் பற்றிய கவிதைகள் உள்ளடங்கிய பகுதியாக தென்படுகின்றது.

அந்தவகையில் முன்னைய கவிதைத் தொகுப்புகளில் உள்ள கவிதைகளை விட சற்று வித்தியாசப்பட்டதாக பிரமிப்பை ஏற்படுத்துவதாக அது நல்ல வீச்சோடு வெளிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதக்கது. 

பி.எம்.எம்.ஏ.காதர்
(படங்கள்; மருதமுனை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...