தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது-19 Arrested for Not Wearing Mask

- பெரும்பாலானோர் கிரிபத்கொடை, பிலியந்தலையைச் சேர்ந்தவர்கள்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிரிபத்கொடை, பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் விதி மீறல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பித்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 3,470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுமென அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

நீங்கள் நாட்டில் எங்கிருந்தாலும், உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசத்தை அணிய வேண்டும் என்பதோடு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது முகக்கவசத்தை அகற்றுவதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி விழாக்களை நடத்த அனுமதி கிடையாது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...