அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை

விரைவில் நடைமுறைப்படுத்த ஏற்பாடு - சரத் வீரசேகர

பெருமளவு மனித உயிர்களை பலி கொள்ளும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் 30 வருட யுத்தத்தின் போது 29 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். எனினும் 10 வருடங்களுக்குள் வீதி விபத்துக்களினால் 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வீதி ஒழுங்குகள் மீறப்படுவதாலேயே பெருமளவு வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதிலும் குறிப்பாக போதைப்பொருள் பாவனை, வீதி விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை சோதனையிடுவதற்கான விசேட பொறிமுறை ஒன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

50 வீதமான வீதி விபத்துக்களுக்கு போதைப்பொருள் பாவனையே காரணமாக அமைந்துள்ளது. கஞ்சா, ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருட்களை பாவிப்பதால் இடம்பெறும் வீதி ஒழுங்குகளை மீறும் செயற்பாடுகளிலேயே வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் நாட்டில் தற்போது போதைப் பொருள் பரிசோதனை தொடர்பில் உபயோகப்படுத்தப்படும் உபகரணங்கள் தொடர்பிலும் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் தொடர்பிலும் அதன் பயன்பாடுகள் சம்பந்தமாகவும் அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

போதைப்பொருள் உபயோகிப்போரை மிக விரைவாக இனங்காணும் வகையில் நவீன உபகரணங்களை உபயோகிப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் மேற்படி உபகரணங்களை விரைவாக உபயோகத்திற்கு விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன ஆகியோர் உட்பட சுகாதார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...