90 வயது மூதாட்டியிடம் 32 மில்லியன் டொலர் மோசடி | தினகரன்

90 வயது மூதாட்டியிடம் 32 மில்லியன் டொலர் மோசடி

சீன அதிகாரி போன்று தோன்றிய ஏமாற்றுக்காரர்களிடம் ஹொங்கொங்கைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர் 32 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஏமாந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது அந்த நகரில் இடம்பெற்ற மிகப்பெரிய தொலைபேசி வழி மோசடியாக பதிவாகியுள்ளது.

ஹொங்கொங்கின் பீக் பகுதியில் ஆடம்பர இல்லம் ஒன்றில் வசிக்கும் வயதான பெண்ணையே மோசடிக்காரர்கள் இலக்கு வைத்திருப்பதாக பொலிஸார் கடந்த செவ்வாயன்று தெரிவித்தனர்.

சீன பாதுகாப்பு அதிகாரிகளாக தோன்றிய மோசடிக்காரர்கள், அந்த மூதாட்டியின் அடையாளத்தை பயன்படுத்தி சீனாவில் மோசமான குற்றம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாப்பு மற்றும் விசாரணைக்காக வேறு கணக்கிற்கு பரிமாற்றுவதற்கு அந்த மோசடிக்காரர்கள் கேட்டுள்ளனர். இதன்படி அந்த மூதாட்டியின் விட்டுக்கு வந்த ஒருவர் அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை 11 கணக்குகளுக்கு மாற்றுவதற்கு சம்மதிக்கச் செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து ஐந்து மாதங்களுக்குள் மோசடிக்காரர்களிடம் அந்த மூதாட்டி 32 மில்லியன் டொலர்களை பறிகொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி அந்த மூதாட்டியின் மகள் பொலிஸாருக்கு முறையிட்டதை அடுத்து 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹொங்கொங்கில், செல்வந்தர்களான முதியோரைக் குறி வைத்து நடத்தப்படும் தொலைபேசி மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...