போராடிய மண்ணில் வேரோடிய காதல் 'கார்குழலி' கலைத்துவ படைப்பு... | தினகரன்

போராடிய மண்ணில் வேரோடிய காதல் 'கார்குழலி' கலைத்துவ படைப்பு...

எங்கள் படைப்புக்களும், எங்கள் கலைஞர்களும் இன்று மாத்திரமல்ல அன்று தொட்டே உலகப் பரப்பில் கொண்டாடப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றார்கள். ஆயினும் கால நேரச் சூழல் காரணமாய் அண்மிய ஆண்டுகளாய் எங்கள் கலைஞர்களின் வித்தியாசமான சிந்தனைப் படைப்புக்கள் பார்ப்போரை அப்படியே கட்டி போட்டு விடக் கூடியனவாய் அமையப்பெற்று விடுகின்றன. அப்படியானதொரு வெளியில் தான் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகி பார்ப்பவர்கள் அனைவரையும் ஒரு காலத்திற்குள் கொண்டு சென்றிருக்கின்றது. 'கார்குழலி' என்னும் பாடல் கே.எம். புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. 

'கார்குழலி' உண்மையில் இந்தப் பெயரை கண்ணுறுகின்ற போதே பல நினைவுகள் நம்மிடையே வந்து போவதைத் தவிர்க்கப்பட முடியவில்லை. எங்களுடைய வாழ்வியலிலே நாம் தொலைத்தது ஏராளம். எங்கள் மண்கண்ட அசாதாரண சூழலில் தான் எங்கள் வாழ்வு மின்னியது என்பது தான் வெளிப்படை. அப்படியாகத் தொலைந்த பலவற்றில் பல சொல்ல முடியாக் காதல்கள் ஏராளம். முடிவை எட்ட முடியாக் காதல்களும் தாராளம். 

'கார்குழலி' பாடலும் அப்படித்தான். இழந்தவற்றை அற்புதமாகக் காட்டியிருக்கின்றது.

பாடலாசிரியர் குவேயின் வரிகள் உண்மையிலேயே நம்மை ஒரு கால வாழ்விற்குள் கொண்டு செல்கின்றது. அருமையாகவும் அமைந்திருக்கின்றது எனலாம். 

பாடலின் தன்மைக்கேற்ற பாடலை அருமையாக இசையமைத்துப் பாடியிருக்கின்றார் இசையமைப்பாளர் பத்மயன் சிவா. முழுமையாக பாடலை வேறு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்ற அவரது முயற்சி பாராட்டத்தக்கது. இணைந்து குரல் கொடுத்திருக்கின்ற பைரவியின் குரலும் நன்றாக அமைந்திருக்கின்றது. 

பாடலின் ஆடியோ எப்படி வெளிப்படுத்தியிருக்கின்றது என்பதற்கு அப்பால் இந்தப்பாடலின் காண்பிய அமைப்பிற்கு முதலில் சல்யூட் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் பாடலை இயக்கியிருக்கும் கதிர் உண்மையில் பாராட்டத்தக்கவர்.

பாடலாசிரியரினதும், தயாரிப்பாளரினதும் சிந்தனைக்கு வண்ணம் கொடுத்து பாடலை அழகாக்கியிருக்கின்றார். இந்தப் பாடலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அரிக்கன் லாம்பு வாழ்வு, யுத்தக் காதல் கடிதங்கள், பழைய தொலைக்காட்சி பார்க்கும் நினைவுகள் என பலவற்றை மீள நினைவுபடுத்தியிருக்கின்றனர் பாடல் குழுவினர். 

திரையில் தோன்றி பாடலை அழகு படுத்தியிருக்கும் மதிசுதா மற்றும் கீர்த்தி ஆகியோர் எங்கள் மண்ணின் பல முகங்களை பிரதிபலித்துள்ளனர். படைப்புக்களைத் தேர்ந்து அவற்றில் பணியாற்றும் நடிகரும் இயக்குனருமாகிய மதிசுதா இயல்பாக கதாநாயகி கீர்த்தியுடன் தனது நேசத்தை முகத்தில் வெளிப்படுத்தும் பாங்கு சிறப்பு. 

அண்மிய நாட்களாய் எங்கள் பிள்ளைகளின் படைப்புக்கள் நல்லதொரு வெளிப்பாட்டைக் காட்டி நிற்கக் கூடிய வெளியில் 'கார்குழலி' பாடல் பல பழமையான விடயங்களையும், மறக்கவியலா பல நினைவுகளையும் மீள நினைவுபடுத்தி தனித்துத் தெரியும் படைப்பாக மிளிர்கின்றது என்பதில் எதுவித ஐயமுமில்லை.   

வெற்றி துஷ்யந்தன்


Add new comment

Or log in with...