வெள்ளவத்தை முதல் கல்கிசை வரை கடற்கரையை தூய்மையாக்கும் பணி | தினகரன்

வெள்ளவத்தை முதல் கல்கிசை வரை கடற்கரையை தூய்மையாக்கும் பணி

கொழும்பு காலிமுகத்திடல்தொடக்கம் காலிவரையிலான கடற்கரையோரம் இயற்கை அழகு நிறைந்ததாகும்.சூரிய அஸ்தமனத்தின் தடையற்ற பார்வைமக்களை ஈர்க்கிறது. குறிப்பாக மாலைநேரத்தில், இயற்கையான சூழலை மக்கள்அனுபவிக்கின்றனர்.

கொழும்பில்  வாழ்கின்ற மக்கள்  மாலை வேளையில் அல்லது விடுமுறை நாட்களில் குடும்பமாக கடற்கரையோரத்துக்குச் செல்கின்றனா். காலை வேளையில் கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுகின்றனா்.  அங்கு  இயற்கையான குளிர்ந்த காற்றைச் சுவாசிக்க முடிகின்றது. கடற்கரையோர பச்சைத் தாவரங்கள் கீழ் இருந்து இயற்கையை அனுபவிக்க முடிகின்றது.

கடற்கரையோரம் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளுக்கும்  மிகவும் பிடித்தமான இடமாகும். ஓய்வெடுக்கவும், கடற்கரையை ரசிக்கவும், தாம் கொண்டு வந்த உணவினை உண்ணவும் அது ஒர் அழகான இடம். 

கொழும்பில் இருந்து   காலி வரை செல்லும் கரையோரப் புகையிரதத்தில் செல்வோர் இயற்கை அழகை ரசிக்கின்றனர். நாளாந்தம் வெயிலிலும் வாகனங்களது புகையின் மத்தியிலும் பயணிப்போரின் சுகாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இப்பிரதேசம் நன்மை பயக்கின்றது.

வெள்ளவத்தை தொடக்கம் பம்பலப்பிட்டி வரை  காலையிலும் மாலையிலும் பலர் தனது உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிக்காக செல்வார்கள்.   ஆனால்  இப்பிரதேசத்தை  அறிவீனமானவா்கள்  நாளாந்தம் அசுத்தப்படுத்தி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.. 

கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவை வரையிலான பகுதிகளில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் பலா்  சட்டவிரோத கட்டடங்களை நிர்மாணித்துள்ளனா். தற்காலிக கூடாராங்களையும் கொட்டில்களை அமைத்து அதனை சொந்தம் கொண்டாடி அதில்  வாழ்ந்து வருகின்றனா். சிலா் கடற்கரையில் உட்காந்து  போதைப்பொருள்,மதுபானம் பயன்படுத்துகின்றனா்.

இவை போன்ற சட்டவிரோத செயல்களினால் பம்பலப்பிட்டி, தெஹிவளை வெள்ளவத்தை, கல்கிசை , இரத்மலானை, மொரட்டுவை ஆகிய பிரதேங்களின்   கடற்கரை நாளாந்தம்  மாசுபடுத்தப்பட்டு வருகின்றது. சுற்றாடல் அசுத்தமடைந்து வருகின்றது. இப்பிரதேசங்களில் குப்பை கூளங்கள், கட்டட நிர்மாணங்களின் கழிவுப்  பொருட்கள், பிளாஸ்டிக், வெற்றுப் போத்தல்கள் நாளாந்தம் கொட்டப்பட்டு வருகின்றன. 

கடற்கரையோர பாதுகாப்புத் தளங்கள் வெள்ளவத்தை, கல்கிசை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத் தளங்கள் உள்ள  கடற்கரை பகுதிகள் மட்டுமே  பாதுகாக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத குடியிருப்புக்களை அவா்களால் அகற்ற முடியவில்லை .அந்த மக்கள் கடற்கரையை ஆக்கிரமித்துக் கொண்டே செல்கின்றனா்.

இக்கட்டடங்களுக்கு மின்சாரம், நீர் இணைப்பு வசதிகளைக் கூட தோ்தல் காலங்களில் சில அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். சில வா்த்தகா்கள்  கடற்கரையை அண்மித்து சட்டவிரோதமான  ஹோட்டல்கள், தங்குமிடங்கள் அமைத்துள்ளனர். மீனவா்களின் தற்காலிக கொட்டிகள்     நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவா்களால்  கழிவுப் பொருட்கள்  கடற்கரை ஓரங்களில் நாளாந்தம் கொட்டப்பட்டு வருகின்றன.

தெஹிவளை, வெள்ளவத்தை,  கல்கிசை  பிரதேச கடற்கரை ஓரங்களில்   உள்ள குப்பை கூளங்களை அகற்றும் திட்டமொன்றினை  லயன்ஸ் கழகம் 306சீ2இன் கீழ் உள்ள  17லிஓ” கழகங்கள் இணைந்து அண்மையில் மேற்கொண்டன. 

இந்நிகழ்வில் கடல் சுழியோடிகள்  கழகம் கல்கிசை தொடக்கம் வெள்ளவத்தை வரையிலான பகுதிகளில் கடல்நீருக்குள் உள்ள குப்பைகளை அகற்றியது.   இச்சிரமதானப் பணியில் கொழும்பு   ரோயல் கல்லூரி, சப்ரகமுவ பல்கலைக்கழகம், இசிப்பத்தானை கல்லூரி  உட்பட 17பாடசாலைகளின் லிஓ கழக  அங்கத்தவா்கள்  இணைந்து இத்திட்டத்தினை வெற்றிகரமாக முடித்தனா். 

இவற்றுக்கு  மேலதிகமாக  வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் ஆசிரியைகள், மாணவத் தலைவிகள் இணைந்து வெள்ளவத்தை கடற்கரை பிரதேசத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர்.

இம்மாணவ மாணவிகள் ‘இயற்கையைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில்  சிரமதானத்தில் ஈடுபட்டனர். ஆனால் இயற்கையை  அனுபவிக்கும் மக்கள் ஒருபோதும் சிரமதானப் பணிகளில்   பங்கு கொள்வதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக்  கழிவுகளைக் கூட அவ்விடத்திலேயே விட்டுச் செல்கின்றனர்.  ஒவ்வொரு இடங்களிலும் குப்பைகள்,  பிளாஸ்டிக் போத்தல்கள் வெவ்வேறாக போடுவதற்காக மாநகர சபையினால் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குப்பைகளைக் கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அங்கு விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பலர் அங்கேயே குப்பைகளை கொண்டியிருப்பதனை அவதானிக்க முடிந்தது.

அஷ்ரப் ஏ சமத்


Add new comment

Or log in with...