வோரோடியுள்ள கொலைகளும், தற்கொலைகளும் | தினகரன்

வோரோடியுள்ள கொலைகளும், தற்கொலைகளும்

போராடிய மண்ணில் இன்று  வோரோடியுள்ளது கொலைகளும், தற்கொலைகளுமாகும்.

கொலை, தற்கொலை இச்சொற்கள் இரு வேறு அர்த்தங்களைக் கொடுத்தாலும் மனிதனின் மரணமே அச்சொற்களின் இறுதியாக பொருள்படுகிறது. ஏன் கொலை, எதற்கு தற்கொலை என்ற இரு கேள்விகளுக்கும் பதிலைத் தேடிக்கொள்ள முடியாமலுள்ளது. கொலை என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்வது அல்லது மரணமடையச் செய்வதாகும். ஏன் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொலை செய்கிறான். கோபம் அல்லது குரோதம் அல்லது பரம்பரை பகை, போதை, போர் போன்றவற்றால் நிகழ்வதாகும்.

ஆனால் நாம் மேலே குறிப்பிட்ட போர் முடிந்துவிட்டது. ஆதலால் போரினால் கொல்லப்படும் சம்பவங்கள் இல்லை. அப்படியாயின் ஏன் வடபுலத்தில் இன்னும் கொலைகள் நடக்கின்றன. இறுக்கமான கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் இறுக்கிக் கட்டிவைத்திருந்த குரோதங்களும், கோபங்களும் தலைவிரித்தாடுவதாகவே நோக்க வேண்டியுள்ளது. அத்தோடு போதையும் கலந்துள்ளதால் கட்டுக்கடங்காத நிலையை அடைந்துள்ளது. அடுத்தது தற்கொலை, ஒருவர் தன்னைத்தானே கொலை செய்துகொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து, ஆளுமைச் சிதைவு என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வடபுலத்தை நாம் உற்று நோக்கினால் கலாசாரம், கல்வி, பண்பாடு என்று உலகமே வியக்கும் வகையில் வாழ்ந்த மக்கள் சமூகத்தினர். ஆனால் இன்று அவை இருந்தாலும் வெளியில் குற்றங்களும் கொடூரங்களுமே தென்படுகின்றன. முல்லைத்தீவில் தற்கொலைச் சம்பவங்கள் அண்மையில் வெகுவாக அதிகரித்துள்ளன. போருக்குப் பின்னரான கால மாற்றங்களை எமது மக்களால் புரிந்துகொள்ள முடியாத நிலையும் கட்டமைப்பு ரீதியாக ஒன்றும் சீராக செய்யப்படாததால் சமூக ஏற்றத்தாழ்வுகளும், பிறப்புகளும் அதிகரித்துள்ளன.

மற்றையது வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் பாமர மக்களின் மனப்பாங்கு மாற்றங்களும் இவற்றுக்கு தூண்டுதல் காரணங்களாகக் காணப்படுகின்றன.

அத்தோடு போர் சூழ்நிலையில் வாழ்ந்த மக்களின் மனங்களில் இன்னும் அந்த போர் ரணங்களும் விட்டு மறையாத சூழ்நிலையில் கஷ்டங்கள், பிரச்சினைகளும் அம்மக்களின் மனதில் பெரும் பாரமாக உருவெடுத்து தற்கொலைகளுக்கு தூண்டுகோளாக அமைந்து விடுகிறது.உலகில் மிகவும் கொடுமையான தும்பியல் குறியீடுகள் என்றால் பசியும், வறுமையும்தான்.

முல்லைத்தீவில் வறுமையில் வாடும் மக்கள் அதிகமானோர் உள்ளனர். வறுமையை போக்க மேலும் இதர பல காரணிகளில் சிக்கி தவிக்கும் இளம் வயதினர் அதீத மன அழுத்தத்தால் இவ்வாறான முடிவுகளுக்கு ஆளாகின்றனர். இவற்றுக்கான காரணங்களை சொல்வதென்றால் அடுக்கிக் கொண்டே போகலாம்.

காரணங்களைச் சொல்லிப் பலனில்லை என்பதால், இவற்றுக்கு நாம் கொடுக்கும் தீர்வும், நிறுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதோடு இந்த சமூக பிரச்சினையை ஒரு பகுதியினருக்கு மட்டும் பாரப்படுத்திவிட்டு நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

சமூகத்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து தனி மனிதனாக என்ன என்ன செய்ய முடியும் என்பதை மனதில் கொண்டு என் சமூகத்திற்கு என் உடன் பிறப்புக்கு எம் இனத்துக்கு ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக மனதில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் தனி ஆளாக இதைச் செய்ய முற்பட்டால் ஒவ்வொரு தனி மனிதனின் செயற்பாடும் சேரும் போது இப் பிரச்சினைக்கு எளிதான தீர்வை பெற்றுக் கொடுக்கலாம் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

ஶ்ரீ


Add new comment

Or log in with...