மாகாண சபையை பாதுகாக்க தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ கோரிக்கை

தமிழ் கட்சிகள், தேர்தல் அரசியலையும், தமக்குள் இருக்கும் கொள்கை முரண்பாடுகளையும் கடந்து மாகாண சபையை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய காலத்தின் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  

தமிழ் தேசியம் சார்ந்தவர்களும், மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துப் பயணிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுகிறது. இதற்கான முழுமையான செயற்பாட்டுக்கு எமது முற்றான ஆதரவையும் வழங்கவும் தயாராக உள்ளோம். 

தற்போதைய அரசியல் சூழலில் மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏதேதோ காரணங்கள் சொல்லி அரசினால் பின் போடப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் பின் போடப்படுவதால் மாகாண சபை முறைமை செயலிழந்துள்ளது. 

கடந்த ஆட்சியில் இருந்து இது தொடர்கிறது.

இதனால் மாகாண சபை முறைமை அவசியமற்றது என்று கருத்து கூற அரச தரப்பில் பலர் முன் வந்துள்ளனர். 

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். எமது பூர்விக தாயகப் பரப்பில் காணி நிலங்கள் அபகரிக்கப்பட்டு அபிவிருத்தி என்ற பெயரிலும் தொல்லியல் என்ற பெயரிலும் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவதாக கூறி அரசு சட்ட சிக்கலை முன்வைத்து மாகாணசபை தேர்தலை மேலும் பின்னடித்து செல்கிறது.  

காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன.

ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில், அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.   


Add new comment

Or log in with...