பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிச்சயம் நிறுத்தப்படுவர் | தினகரன்

பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிச்சயம் நிறுத்தப்படுவர்

இரு வருடத்தை நினைவுகூர்ந்து  பாராளுமன்றில்  பிரதமர் சூளுரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை கட்டாயம் சட்டத்தின்முன் நிறுத்துவோமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ  தெரிவித்தார்.

தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சமூகத்தின் பார்வையை வேறு திசைக்கு திருப்பும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை காலை 10 மணிக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்புக்கு முன்னதாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியதுடன்,

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறுதின ஆராதனையில் பங்குபற்றியிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை மிகவும் கவலையுடன் நினைவு கூருகின்றோம். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை நினைவு கூருவதுடன், உயிரழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென பிரார்த்திருக்கிறோம். அதேபோன்று உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் எமது ஆழந்த சோகத்தையும் இத்தருணத்தில் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய சாட்சியங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்ட மாஅதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்ய நாம் தயாரில்லை என்ற போதிலும் இந்த விடயத்தில் நீதியை பெற்றுக்கொடுக்க ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறானதொரு துர்திஷ்டவசமான சம்பவம் மீண்டும் இடம்பெறாத வண்ணம் எமது அரசாங்கம் செயற்படும் என்பதை உறுதியாக கூறுகிறோம். இந்த கொடூரத் தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் உறுதியாக நிறுத்துவோம் என்றார்

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...