ரூ.1,000 சம்பளம் வழங்க கம்பனிகளால் முடியும் | தினகரன்

ரூ.1,000 சம்பளம் வழங்க கம்பனிகளால் முடியும்

வழங்காதிருக்க போலிக் காரணங்கள் முன்வைப்பு  இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத் தலைவர்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக 1,000 ரூபாவை வழங்குவது கம்பனிகளுக்கு சாத்தியமானதே. எனினும் உற்பத்தி செலவு அதிகம். விற்பனை மூலம் பெறப்படும் இலாபம் குறைவு என்பது போன்ற காரணங்களை அவை முன்வைத்து சம்பள அதிகரிப்பை வழங்காமலிருக்க முயற்சிக்கின்றன என்று இலங்கை தோட்ட சேவையாளர் தொழிற்சங்கத் தலைவர் சத்துர சமரசிங்க தெரிவித்துள்ளார். இக்கம்பனிகள் தேயிலை உற்பத்திச் செலவையும் ஏலத்தில் அத்தேயிலை வாங்கப்படும் விலையை மட்டுமே தெரிவிக்கின்றனவே தவிர ஒரு கிலோ தேயிலை என்ன விலைக்கு ஏற்றுமதி  செய்யப்படுகிறது என்பதை வெளியெ சொல்வதில்லை என்று தினகரனுக்கு அவர் அளித்த விசேட நேர்காணலின் போது குறிப்பிட்டார்.

ஒரு கிலோ தேயிலையின் உற்பத்தி செலவு 475 ரூபா என்றால் அது கொழும்பு ஏலவிற்பனையில் 553 ரூபாவுக்கு விற்பனையாகிறது. கம்பனிகள தாம் 475 ரூபா செலவு செய்து 78 ரூபாவைத் தான் இலாபமாக பெறுகிறோம். நிறுவனம், தோட்ட நிர்வாகச் செலவுகளை வைத்துப் பார்க்கும் போது எமக்கு நஷ்டமே என்றும் இந்த நிலையில் தொழிலாளர் வேதனத்தை அதிகரிப்பது சவாலான விடயம் என்றும் கப்பனிகள் தெரிவித்து வருகின்றன.

ஆனால் அதே தேயிலையை ஏற்றுமதி செய்யும்போது 820 ரூபா வருமானமாக ஈட்டப்படுவது பற்றி இக்கம்பனிகள் வெளியில் சொல்வதில்லை. ஒருகிலோ தேயிலையின் மூலம் 345 ரூபா இலாபமாக பெறப்படுவதை இக்கம்பனிகள் மூடிமறைத்து நஷ்டம் குறித்த பேசுகின்றன என்கிறார் தோட்ட சேவையாளர் சங்கத் தலைவர்.

தேயிலையை ஏலத்தில் வாங்குவது தரகர்களே. அவர்களிடமிருந்து வேறு நிறுவனங்கள் பெற்று ஏற்றுமதி செய்கின்றன. இவ்வாறு தேயிலையை வாங்கி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அந்தத் தேயிலையை விற்பனைக்கு விட்ட கம்பனியின் தாய் நிறுவனமாக இருப்பதே வழமை. எனவே தேயிலை விற்பனையில் வெவ்வேறு நிறுவனங்கள் சம்பந்தப்படுவது போலதென்பட்டாலும் ஒரு வளாகத்திலுள்ளேயே பணம் புரளுகிறது என்பதே உண்மை. எனவே தேயிலை விற்பனை மூலம் கம்பளிகள் நல்ல வருமானம் பெறுவதால் ஆயிரம் ரூபா வேதனம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்று இவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொழிற் சங்கங்களுக்குத் தெரியாதா என்று அவரிடம் கேட்டபோது, சங்கங்களுக்கு தெரியும் என்றும் ஆனால் பகிரங்கமாக இவ்விடயம் குறித்துப்பேச அவை ஏனோ முன் வருவதில்லை என்றும் கூறிய தோட்ட சேவையாளர் சங்கத் தலைவர், கம்பனி அதிகாரிகள் மட்ட கூட்டங்களில் தான் இது பற்றி குறிப்பிட்டதாகவும் அதற்கு அதிகாரிகள் தரப்பு பதிலளிப்பதில்லை என்றும் கூறினார்.

 அருள் சத்தியநாதன்


Add new comment

Or log in with...