தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமை படாவிட்டால் பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் | தினகரன்

தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமை படாவிட்டால் பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்

- பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரமாகவும் நீதியாகவும் வாழக்கூடிய உரிமைக்காக தமிழரக் கட்சி போராடி வருகின்ற நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்கு ஒரு முகமும் ஆட்சியாளர்களுக்கு ஒரு முகமும் காட்டுவதால்  தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனநாயக ரீதியாக பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவிலில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளை நிருவாக தெரிவு கூட்டத்தில் செவ்வாயக்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் தமது இறை வழிபாடுகளைக் கூட சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன. இந்து ஆலயம் ஒன்றினை அமைக்க வேண்டுமானால் நீண்ட கால குத்தகையில் காணிகள் பெற வேண்டியுள்ளது. ஆனால் பௌத்த விகாரை ஒன்று அமைப்பது என்றால் சட்டரீதியாக அனுமதிகள் வழங்கப்படுகின்ற நிலைமையில் தான் தற்போது  காணப்படுகின்றன. இது ஜனநாயகம் இல்லை என்றே நான் கூறுகின்றேன்.

இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் சுதந்திரமாகவும் நீதியாகவும் வாழ்வதற்கான ஜனநாயகத்தை கேட்டு போராடுகின்ற நிலையில், எங்களது தமிழ் பேசுகின்ற உறவுகளாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்கு ஒரு முகமும் அரசுக்கு இன்னுமொரு முகமும் காட்டுகின்ற நிலையில் தமிழ், முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முடியாத சூழ்நிலையில், தமிழ் பேசும் சமூகம் பாரிய உரிமை ரீதியான பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இந்த நாட்டில் தமிழசு கட்சி எந்த ஒரு ஜனநாயக ரீதியான தீர்மானத்தை நோக்கி பயணித்தாலும் அது முஸ்லிம் மக்களின் நலன் சார்ந்தும் சிந்தித்து திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது.

தற்போதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையிலும் முஸ்லிம் மக்களின் நீதிக்கான குரலாக ஜ.நா. மனித உரிமை பேரவை வரை நாம் ஒலித்துக் கொண்டு இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

(திருக்கோவில் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...