கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டமை தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி | தினகரன்

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டமை தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி

- யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டு உப பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகுமென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

 பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விளையாட்டுத்துறை அமைச்சின் ஊக்கமருந்து தடை தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகையில், 

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகமாக தரமிறக்குமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அம்பாறை மாவட்ட அரச அதிபருக்கு ஏப்ரல் 8ஆம் திகதியிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த 28வருடங்களாக கல்முனை தமிழ் பிரதேச செயலகமாக இது செயற்பட்டு வருகின்றது. இங்கு 39,000க்கு மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 3000வரையிலான முஸ்லிம்களும் 104சிங்களவர்களும் உள்ளனர். வாக்காளர்களாக 22,500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 

பிறப்பு,இறப்பு,விவாகப்பதிவாளர் அலுவலகம், காணி அலுவலகம் என்பவற்றினால் இது ஒரு தனி பிரதேச செயலகமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்படுகின்றன. வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத பல பிரதேச செயலகங்கள் உள்ளன. மட்டக்களப்பு, வவுனியாப்பகுதிகளில் இவை உள்ளன. இவ்வாறான நிலையில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகின்றீர்கள்?தமிழ் மக்களை உள்ளடக்கிய பிரதேச செயலகமாக இருப்பதுதான் காரணமா?  


Add new comment

Or log in with...