காண்டாமிருக வேட்டைக்காரர் யானையிடம் மிதிவாங்கி பலி | தினகரன்

காண்டாமிருக வேட்டைக்காரர் யானையிடம் மிதிவாங்கி பலி

தென்னாபிரிக்காவின் குருகர் தேசியப் பூங்காவில் காண்டாமிருகத்தை வேட்டையாட வந்ததாக நம்பப்படும் ஆடவரை, யானைகள் மிதித்துக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அதிகாரிகள் வழக்கமான காவலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தப்பியோட முயன்ற மூவர் யானைக் கூட்டத்திடம் சிக்கிக்கொண்டனர்.

பின்னர், மோசமாக மிதி வாங்கிய ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கண்டனர். அந்த ஆடவர் காயங்களால் உயிரிழந்தார் என்று தென்னாபிரிக்க தேசிய பூங்காக் கழகத்தின் பேச்சாளர் கூறினார்.

மற்றொரு ஆடவரும் தாக்கப்பட்டார். ஆனால், அவர் தப்பிவிட்டார். மூன்றாவது நபர் பிடிபட்டார். அங்கு அதிகாரிகள் ஒரு துப்பாக்கியையும், கோடாரியையும் கண்டெடுத்தனர்.

வேட்டைக்காரர்கள் காண்டாமிருகங்களைச் சுட்டு அவற்றின் கொம்புகளை வெட்டி எடுத்துக்கொள்வது வழக்கமாக நிகழும் ஒன்று. அவற்றுக்கான தேவை ஆசியாவில் மிகவும் அதிகம்.

அவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் சுமார் 80 வீதமான காண்டாமிருகங்கள் தென்னாபிரிக்காவில் உள்ளன.

குறிப்பாக, குருகரில் அவை அதிகம் கொல்லப்படுகின்றன. எனினும், கடந்த 6 ஆண்டுகளாக காண்டாமிருகங்கள் கொல்லப்படுவது குறைந்துள்ளது.


Add new comment

Or log in with...