இந்தியாவிலிருந்து ஹொங்கொங் வந்த 49 பயணிகளுக்கு தொற்று | தினகரன்

இந்தியாவிலிருந்து ஹொங்கொங் வந்த 49 பயணிகளுக்கு தொற்று

புதுடில்லியில் இருந்து ஹொங்கொங் சென்ற விமானத்தில் இருந்தவர்களில், குறைந்தது 49 பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் தொற்று உறுதியான அனைவரும், இம்மாதம் நாலாம் திகதி இந்தியாவைச் சேர்ந்த விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் ஹொங்கொங் சென்றவர்கள்.

ஹொங்கொங்கில் அன்றாடம் பதிவாகும் வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, விமானப் பயணிகளிடையே உறுதியான எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவு. எனவே, 49 என்பது ஹொங்கொங்கிற்குக் கணிசமான எண்ணிக்கை என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சம்பவத்தில் தொடர்புடைய விஸ்தாரா விமானத்தில், 188 பேர் வரை பயணம் செய்யமுடியும். ஆனால், அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர் எனும் விபரத்தை ஹொங்கொங் தெரிவிக்கவில்லை.

இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்துவரும் பயணிகள் விமானங்களுக்கு, ஹொங்கொங், கடந்த திங்கட்கிழமை தொடக்கம் 2 வாரத் தடை விதிப்பதாக அறிவித்தது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...