நியூஸிலாந்து விமான நிலைய ஊழியருக்கு கொரோனா

நியூஸிலாந்தின் ஒக்லாந்து விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வருடத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே இருவழிப் பயண ஏற்பாடு கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த ஊழியர், ஏற்கனவே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

வைரஸ் பரவல் உள்ள நாடுகளிலிருந்து வரும் விமானங்களைச் சுத்திகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார் என, நியூஸிலாந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்தார்.

வழக்கமாகச் செய்யப்படும் பரிசோதனையில், அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

இதற்கு முன்னதாக, இம்மாதம் 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அவரது தொடர்புத் தடங்களைக் கண்டறியும் பணிகள் தொடர்வதாக ஆர்டன் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழிப் பயண ஏற்பாட்டை நிறுத்துவது குறித்து அவர் ஏதும் கருத்துரைக்கவில்லை.


Add new comment

Or log in with...