இலங்கை - பங்களாதேஷ் முதல் டெஸ்ட்; இன்று கண்டியில் ஆரம்பம் | தினகரன்

இலங்கை - பங்களாதேஷ் முதல் டெஸ்ட்; இன்று கண்டியில் ஆரம்பம்

- நாணயச் சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி; துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

2வது போட்டி இதே மைதானத்தில் எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தொடர் உலக டெஸ்ட் சம்பியன் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவிருந்தாலும் உலக டெஸ்ட் சம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கான இரண்டு அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் அட்டவணைப்படி இத்தொடர் நடைபெறுகிறது.

உலக டெஸ்ட் சம்பியன் புள்ளித் தரவரிசையில் 8ம் 9ம் இடங்களைப் பெறும் அணி எதுவென்று இத்தொடரின் முடிவிலேயே தங்கியுள்ளது. இத்தொடர் கடந்த வருடம் ஜூன் மாதமளவில் நடைபெறவிருந்தாலும் கொரோனா தொற்றின் காரணமாக பல முறை பிற்போடப்பட்டதன் பின் இன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இத்தொடர் இரு அணிகளுக்கும் முக்கிய தொடராக அமைந்துள்ளது. ஏற்கனவே சொந்த மண்ணில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்துவந்த இரு அணிகளும் இத் தொடரை கட்டாயம் வெல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் களமிறங்குகின்றன. அண்மையில் முடிவுற்ற மேற்கிந்தியத் தீவுகளில் அவ்வணிக்கு எதிரான தொடரை 0-0 என சமநிலையில் முடித்துக் கொண்டமை இலங்கை அணிக்கு மனதளவில் வலிமையைக் கொடுத்துள்ளது.

அத்தொடரில் இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் தமது பொறுப்பை உணர்ந்து சிறந்த முறையில் செயற்பட்டிருந்தனர். முக்கியமாக ஓசத பெர்னாண்டோ, லஹிரு திரிமான்ன, பெதும் நிஸ்ஸங்க தொடர் முழுவதும் திறமையாகத் துடிப்பெடுத்தாடியிருந்தனர். அறிமுக வீரரான பெதும் நிஸ்ஸங்க அறிமுகப் போட்டியிலேயே சதமடித்திருந்தார். ஒரு நாள் போட்டிகளிலும் இவர் திறமையாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நீண்டநாட்களுக்குப் பின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவும் இத்தொடரில் தனது வழமையான திறமைக்குத் திரும்பியிருந்தார்.

முதல் மூன்று இன்னிஸ்களில் சோபிக்காத தலைவர் திமுத் கருணாரத்ன தொடரின் இறுதிப் பகுதியில் திறமைகாட்டியிருந்தமை நடைபெறவிருக்கும் பங்களாதேஷுடனான தொடருக்கு சாதகமாக அமையும். இத் தொடரில் இலங்கை அணியின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது.

முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த் சமீர, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ சிறப்பாகப் பந்து வீசி மேற்கிந்திய வீரர்களை அச்சுறுத்தியிருந்தனர்.

இத்தொடரின் அதிக விக்கெட்களைக் கைப்பற்றிய சுரங்க லக்மால் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். எமது வீரர்களின் இத்திறமை பங்களாதேஷ் தொடரிலும் நீடித்தால் சொந்த மண்ணில் சாதிக்க வாய்ப்புண்டு.

நீண்ட இடைவெளிக்குப் பின் பங்களாதேஷ் அணி அண்ணிய மண்ணில் விளையாடவுள்ளதால் அவ்வணிக்கு இத்தொடர் கடும் சவாலாகவே அமையும். இலங்கை அணியைப் போன்றே அவ்வணியின் அண்மைக்கால பெறுபேறுகள் மோசமாகவே அமைந்துள்ளது. அணித் தலைவர் மொனிமுல் ஹக்கின் தலைமையில் நடைபெற்ற 6 போட்டிகளில் சிம்பாப்வேயுடனான ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

அவ்வணி கடைசியாக தன் சொந்த மண்ணில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் முழுமையாகத் தோல்வியுற்றது. அவ்வணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் தமீம் இக்பால், முஸ்பிகூர் ரஹீம், தலைவர் மொனிமுல் ஹக், லிட்டன் தாஸ் போன்ற திறமையான வீரர்கள் இருந்தாலும் சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன், வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிசூர் ரஹ்மான் இல்லாதது அவ்வணிக்கு சற்றுப் பின்னடைவே.

சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் இரு அணிகளிலும் அதிகமாக சுழற்பந்து வீச்சாளர்களுடனேயே களமிறங்க எதிர்பார்த்துள்ளன. ஆனால் சுழற்பந்து வீச்சில் இலங்கை அணியின் வீரர்களே முன்னிலை பெற்றுள்ளனர். லசித் எம்புல்தெனிய கடைசியாக இலங்கை மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துடனான தொடரில் சிறப்பாகப் பந்து வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றைய போட்டியில் இவர் களமிறங்குவது சந்தேகமே. இவரின் இடத்துக்கு வனிந்து ஹசரங்க, புதுமுகவீரர் பிரவீன் ஜயவிக்ரமவின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

உலக டெஸ்ட் சம்பியன் ஷிப் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறும் இத்தொடர் இரு அணிகளுக்கும் கடும் சவாலாக அமையும் என்பது திண்ணம்.

2001ம்ஆண்டு ஆரம்பமான இலங்கை பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இலங்கை அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

இதுவரை இலங்கை அணி ஒரு இன்னிங்ஸில் பெற்ற கூடிய ஓட்டமாக 2014 ஆம் ஆண்டு டாக்கா பங்கபந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் 730 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் பங்களாதேஷ் அணி 2013ம் ஆண்டு காலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் 631 ஓட்டங்கள் பெற்றதே அவ்வணி சார்பாக பெறப்பட்ட கூடிய ஓட்டங்களாகும்.

குறைந்த ஓட்டங்களாக 2007ம் ஆண்டு கொழும்பு எஸ். எஸ். ஸி மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே பதிவாகியுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் குமார் சங்கக்கார 21 இன்னிஸ்களில் 58.34 சராசரியுடன் 1816 ஓட்டங்கள் பெற்றதே ஒரு வீரர் பெற்ற கூடிய மொத்த ஓட்டங்களாகும். தனி நபர் கூடிய ஓட்டங்களாக 2014ம் ஆண்டு குமார் சங்கக்கார டாக்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியொனறில் 319 ஓட்டங்கள் இலங்கை சார்பாகவும், 2013ம் ஆண்டு காலி மைதானத்தில் முஸ்பிகூர் ரஹீம் பெற்ற 200 ஓட்டங்கள் பங்களாதேஷ் சார்பாகவும் பதிவாகியுள்ளது. கூடிய சதங்களாக சங்கக்கார 12 போட்டியில் 7 சதங்களும், மொஹம்மட் அஷ்ரபுல் 14 போட்டிகளில் 5 சதமங்களும் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை கூடிய விக்கெட்டுகள் கைப்பற்றியோர் வரிசையில் இலங்கை சார்பாக முத்தையா முரளிதரன் 13 போட்டிகளில் 89 விக்கெட்டுகளையும், பங்களாதேஷ் சார்பாக ஷகீப் அல் ஹசன் 6 போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்து வீச்சாக இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 2013 ஆம் ஆண்டு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 89 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும், பங்களாதேஷ் அணி சார்பாக 2008ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற போட்டியொன்றில் ஷகிப்அல்ஹசன் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை இலங்கை சார்பாக 2007ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற போட்டியொன்றில் முத்தையா முரளிதரன் 82 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்டுகளையும், பங்களாதேஷ் சார்பாக 2018ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற போட்டியொன்றில் தஜ்துல் இஸ்லாம் 159 ஓட்டங்களுக்கு 08 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.


Add new comment

Or log in with...