வெண்கலப் பதக்கம் வென்றார் இசுரு குமார

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய சிரேஷ்ட பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் டிலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதனிடையே, குறித்த போட்டியில் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் (Clean & Jerk) வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆசிய பளுதூக்கல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியாக ஆசிய சிரேஷ்ட பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 18ஆம் திகதி உஸ்பெகிஸ்தானின் தஸ்கென் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.

இந்தப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்திக்க திசாநாயக்க (73 கி.கி எடைப்பிரிவு), டிலங்க இசுரு குமார (55 கி.கி. எடைப்பிரிவு), திலங்க பலகசிங்க (61 கி.கி. எடைப் பிரிவு), சத்துரிக்கா ப்ரியந்தி (81 கி.கி. எடைப்பிரிவு) ஆகிய நான்கு வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.

போட்டிகளின் முதல்நாளான நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப்பிரிவு பளுதூக்கலில் டிலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 137 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், ஒட்டுமொத்தமாக 241 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனிடையே, ஸ்னெச் முறையில் வெண்கலப் பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பை 4 கிலோ கிராம் எடையினால் அவர் தவறவிட்டார். அவர் அங்கு 104 கிலோ கிராம் எடையைத் தூக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய சிரேஷ்ட பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகள் வரலாற்றில் வீரர் ஒருவரினால் ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் சந்தர்ப்பமாக இது இடம்பிடித்தது.

முன்னதாக, 2019இல் சீனாவில் நடைபெற்ற சிரேஷ்ட வீரர்களுக்கான ஆசிய பளுதூக்கல் போட்டியில் 55 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கு குறைவான போட்டியில் களமிறங்கி இசுரு குமார வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இசுறு குமார பெற்றுக்கொண்ட இந்த வெற்றியானது, ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை வீரரொருவர் பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்ற வீரராகவும் இசுரு குமார புதிய சாதனை படைத்தார். இசுரு குமார குருநாகல் சேர். ஜோன் கொத்தலாவல கல்லூரி மற்றும் கெட்டுவான மகா வித்தியாலத்தின் பழைய மாணவராவார். போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை உஸ்பகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆண்களுக்கான 61 கிலோ கிராம் எடைப்பிரிவு பளுதூக்கல் போட்டியில் களமிறங்கிய திலங்க விராஜ் பலகசிங்கவுக்கு எந்தவொரு பதக்கத்தையும் வெற்றிகொள்ள முடியாமல் போனது.

குறித்த போட்டியில் அவர், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 145 கிலோ எடையைத் தூக்கியதுடன், ஸ்னெட்ச் முறையில் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.


Add new comment

Or log in with...