மாடுகளின் உரிமையாளர்களுக்கு நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கவனிப்பார் அற்றுக் காணப்படும் கட்டாக்காலி மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

கட்டாக்காலி மாடுகள் விளையாட்டு மைதானம், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் போன்றவற்றை அசுத்தப்படுத்தி வருவதோடு மக்களுக்கு பெரும் அசௌகரிகங்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இரவு, பகலாக வீதிகளில் திரிவதால் வீதி விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படுவதோடு, பயிர்ச் செய்கைக்கும் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை (18) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் ஒரு நாளைக்குள் உரிமைகோராத பட்சத்தில் நீதிமன்றினூடாக மாடுகளை அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் தத்தமது மாடுகளை உரிய முறையில் பாராமரிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

(ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...