உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்; ஆறாத் துயருடன் இரு வருடங்கள் | தினகரன்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்; ஆறாத் துயருடன் இரு வருடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற இரண்டு ஆண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கத்தோலிக்க மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 2019ஏப்ரல் 21ஆம் திகதி இன்றுபோல் ஒரு தினத்தில் காலையில் ஈஸ்டர் பண்டிகை விசேட திருப்பலி பூசைகளில் கலந்துகொண்டிருந்த மக்கள் நடுவே ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாதிகள் என கூறப்படும் அடிப்படைவாத இனவாதிகளால் எதிர்பாராதவிதமாக கோரமான தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கொழும்பு கொச்சிக் கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றின் மீது அடிப்படைவாத தீவிரவாதிகளால் அன்றைய தினம் காலை சமகாலத்தில் ஆலயங்களில் ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூசைகள் நடந்துகொண்டிருந்தபோது அதில் பங்கு பற்றியிருந்த மக்கள் நடுவில்  தீவிரவாத தற்கொலை குண்டுதாரிகளால்  இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுத் தாக்குதல்களில் சுமார் 300பேர் பலியாகி யுள்ளதுடன் பல நூற்றுக்கணக்கானோர்  படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் இன்றுவரை அங்கவீனர்களாக நடமாடுகின்றனர்.

ஒரு குடும்பத்தில் பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் பலியான சம்பவம், பிள்ளைகள் இருக்க பெற்றோர்கள் பலியான சம்பவம், பெற்றோர்கள் இருக்க பிள்ளைகள் பலியான சம்பவம் என மேற்படி மூன்று தேவாலயங்களிலும் இந்த கோரமான குண்டு தாக்குதலில் பலியான குடும்ப உறவுகளின் அனுபவங்கள் மிகவும் துயரமானவை.

முழு நாட்டையும் சோகத்திற்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் இடம்பெற்ற தினம் கத்தோலிக்க திருச்சபையினால் கறுப்பு ஞாயி றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஆலயங்கள் மட்டுமன்றி மேலும் சில உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகின. தெய்வாதீனமாக அங்கு பாரிய உயிர் சேதங்கள் எதுவும் நிகழவில்லை.

கத்தோலிக்க ஆயர் பேரவை மேற்படி குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் யார்? அதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்? அவர்களுக்கு நிதி வழங்கியவர்கள் மற்றும்  அனுசரனை வழங்கியவர்கள் யார்? அவர்களை பாதுகாத்தவர்கள் யார்? என்ன நோக்கத்திற்காக அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்? இதற்கான பதிலை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என கத்தோலிக்க ஆயர் பேரவை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.

அதற்கிணங்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அந்த ஆணைக்குழு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினரையும் அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்தது.

அந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிகள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டு மேற்படி விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன.

இத்தகைய சூழ்நிலையிலேயே இன்றைய தினம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பலியான மக்களை நினைவு கூரும் நினைவேந்தல் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்பதாக சம்பவத்தில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த இருதினங்களுக்கு முன்னர் அவர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றைக் கூட்டி அது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

நினைவஞ்சலி தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூசைகள், சிறப்பு வழிபாடுகள், மௌன ஊர்வலங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட அவர், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் எளிதாக எண்ணக்கூடிய ஒன்றல்ல. இது கத்தோலிக்க மக்களை மட்டும் இலக்காகக் கொண்ட தாக்குதலாக நினைத்துவிடக்கூடாது. முழு நாட்டையும் பேரழிவுக்கு உட்படுத்தும் சூழ்ச்சிகள் இதனூடாக திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து இன, மத மக்கள் மீதும் இத்தகைய குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் அரசாங்கம் அது தொடர்பில் எச்சரிக்கையாக செயற்பட வேண்டியமை  தொடர்பிலும் அவர் வலியுறுத்தினார்.

கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர்கள் சிலரும் கலந்து கொண்ட மேற்படி செய்தியாளர் மாநாட்டில் அதிர்ச்சி தரும் பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டன.

சுமார் 350பயிற்சியளிக்கப்பட்ட தீவிரவாதிகள்  ஒரு வலையமைப்பாக  செயற்படுகின்றனர். அவர்களில் 175பேர் தற்கொலை குண்டுதாரிகளாக பயிற்சி பெற்றவர்கள். ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் சம்பவத்தின்போது தற்கொலை குண்டுதாரிகள் ஏழு பேர் பலியாகி உள்ள நிலையில் ஏனையவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக அல்லது மறைந்து வாழ்கின்றனர். அவர்களை சிலர் பாதுகாக்கின்றனர்.

அவர்களினால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம். எதிர்காலத்தில் பல்வேறு  குண்டுவெடிப்புகள் இடம்பெற்று நாட்டில் இரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படலாம்.

நாட்டை நேசிக்கும் அனைவரும் இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுவது முக்கியமாகும்.

நாட்டிலுள்ள அனைத்து மதத் தலைவர்களும் இதுவிடயத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டு நாடு எதிர்கொள்ள நேரும் பேராபத்தி லிருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்கு பங்களிப்புச் செய்ய வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.அதேவேளை சமூகத்தில் மறைந்து வாழும் தீவிரவாதிகள் இனங்காணப்பட்டு அவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஆயர் பேரவை  முன்வைத்துள்ளது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இலங்கையின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு சோகத்தை உருவாக்கியுள்ளது. இனியும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே எமது தாழ்மையான கருத்து.

லோரன்ஸ்செல்வநாயகம்


Add new comment

Or log in with...