தன்னலமற்ற சேவையில் பகவானைக் காணலாம்

எதிர்வரும் 24ஆம் திகதி 10ஆவது மகாசமாதி தினம்

'நான் இறந்த பின்பும் கல்லறையிலுள்ள எனது எலும்புகள் நம்பிக்கையும் மனஉறுதியும் அளிக்கும். உருவமோ அருவமோ அற்ற நான் எனது பக்தனைச் சென்றடைவதற்கு எந்தவித கதவுகளும் தடையாக அமையாது' என்று சாயிமகான் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். அதனால் இன்றும் சாயி அவதாரங்களின் அதிர்வுகள், உலகமெங்கும் உணர்த்தியபடி உள்ளன. பகவான் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

பக்தியும், சேவையும் தனது இரண்டு கண்கள் என்று பாபா எப்போதும் கூறுவார். கைதட்டி பக்தியுடன் பஜனை பாடுவதை விட, கைநீட்டி பக்தியுடன் சேவை புரிவது மேலானது என்றும், தன்னலமற்ற சாயி சேவை செய்யும் பக்தனையும் அவனது அடுத்தடுத்த தலைமுறையும் என்றும் கைவிட மாட்டேன் என்ற சத்திய உத்தரவாதமும் அவர் தந்திருக்கிறார்.

அன்போடு சேவை செய்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் அவதாரங்களும் மட்டுமல்ல தெய்வங்களும் முன்னோடியாக இருந்திருக்கின்றன. அதற்கு ஒரு உதாரணம், தெய்வமாகிய கண்ணன் மானிடராகிய பஞ்சபாண்டவருக்கு செய்த சேவைகளை எடுத்துக் காட்டலாம்.

ஜெபம், தபஸ், யக்னம், யாகம் அவற்றால் கிடைக்கும் ஆன்மீக பயனை, தெய்வீக பிரேமயான சேவையோன்றே கொடுக்கக் கூடியது. தன்னலமற்ற சேவை மூலமாக அன்பைப் பெற முடியும். ஒருவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை தருபவரும் பகவான்தான். சேவை செய்யும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு, முன்னுதாரணமாக இருத்தல் வேண்டும். அதற்கு முழு உதாரணமாக இருந்தவரும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாதான்.

சாயி பக்தர்களுக்கு, பகவான் தெய்வீக அவதாரமாகக் காணப்படுகின்றார். மானிட தெய்வமாக வாழ்ந்து காட்டிய பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, மகாசமாதியிலும் அவரது தெய்வீகத்தை வெளிப்படுத்திக் கொண்டுதானிருக்கிறார்

எல்லோரிடமும் அன்பு காட்டு! எல்லோருக்கும் சேவை செய்! இது பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபாவின் அன்புக் கட்டளை. அன்பு நிறைந்த, தன்னலமற்ற சேவையை மனித சமுதாயத்துக்கு வழங்கும் ஒரே நோக்கத்துடன் அவதரித்த கலியுகக் கண்ணன் அவர்.

ஏப்ரல் மாதம் 24ம் திகதி, சனிக்கிழமை கலியுகக் கண்ணனான பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பத்தாவது ஆண்டு மகாசமாதி தினம். இதனை 'ஆராதனா மகோற்சவம்' என்ற பெயரில், வருடாவருடம் கொழும்பு புதுச்செட்டித் தெருவிலுள்ள சாயிநிலையத்தில் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று மகா ருத்ரா யாகத்துடன், புட்டபர்த்தி மகா சமாதியில் வைத்து பூஜித்து எடுத்து வரப்பட்ட பாபாவின் ஐம்பொன் திருவுருவச் சிலைக்கு அபிஷேகம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.

நாளை 22ம் திகதி வியாழக்கிழமை காலையில், சத்ய சாயியின் முதல் அவதாரமான சீரடி சாயி பாபா வீற்றிருக்கும் சீரடி மந்திரில், இராஜகோபுரம் எழுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறவுள்ளன.

எஸ்.டி.எஸ். உதயநாயகம்...
தலைவர், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
மத்திய (கொழும்பு) நிலையம்


Add new comment

Or log in with...