வசதி குன்றிய பிரதேசங்களுக்கு உதவிப் பொருட்கள் விநியோகம்

பிரான்ஸ் நாட்டில் 5வயதில் மறைந்த கர்ணிகா என்ற சிறுமியின் ஞாபகார்த்தமாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் முயற்சியால் பெற்றுக் கொள்ளப்பட்ட உதவிப் பொருட்கள் பல இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்றப்பட்ட புதியவளத்தாப்பிட்டி கிராமத்தில் வறிய மாணவர்கள் பயிலக் கூடியவாறு 'கர்ணிகா கல்வியகம்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகரக் கொட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் ஏனைய உதவிகளும் தொடர்ச்சியாக வழங்கி வைக்கப்படவுள்ளன.

பின்னர் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பின்தங்கிய மளவராயன் மீள்குடியேற்றக் கிராமத்தில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், வறிய குடும்பம் ஒன்றுக்கு தையல் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பில் கல்வி கற்கும் வறிய சிறுமிக்கு துவிச்சக்கரவண்டி கையளிக்கப்பட்டது. இறுதியாக கோமாரி தேவாலயத்திற்கு ஒருதொகுதி கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனும் அவ்வைபவங்களில் சமுகமளித்திருந்தார்.

"கடந்த கால யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்றும் அபிவிருத்திகளைவேண்டி பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். பாரிய ஏக்கத்துடன் காலத்தைக் கடத்தி வரும் அவர்கள் மேலும் புறக்கணிக்கப்பட் வருவது மனிதாபிமானமல்ல. எமது உறவுகள் சிறப்பாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன்தான் நமது புலம்பெயர் உறவுகள் சிலர் எமக்கான உதவித் திட்டங்களைச் செய்து வருகின்றார்கள். அதனைக் கொண்டு நாங்களும் எதிர்காலத்திலே முயற்சியுள்ளவர்களாகச் செயற்பட வேண்டும். எமது சமூகத்திலே மிக மோசான சிந்தனையொன்றுள்ளது. முயற்சி என்பது மிகக் குறைவு. ஏதேனும் கிடைக்குமா என்ற சிந்தனையுள்ளவர்களே அதிகமாக இருக்கின்றார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.

தமிழ்த் தேசியம் என்று சொல்லப்படுகின்ற தூய்மையான அரசியலை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளால் மாத்திரமே எமது மக்களின் பிரச்சினை குறித்தான விடயங்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும். நாங்கள் யாருக்கும் சோரம் போய் யாருக்கும் அடிபணிந்து எமது சமூகத்தை விற்றுப் பிழைப்பதற்குத் தயாரில்லை. எமது பிரதேசங்களின் அனைத்து விடயங்களும் அறிந்தவர்களாகவே நாங்கள் செயற்படுகின்றோம்.

எமது சமூகம் ஏமாற்றப்படும் சமூகமாக இருந்து விடக் கூடாது. தம்பி ஜெயசிறில் போன்று இளம் தலைவர்கள் உருவாக வேண்டும். எமது ஒவ்வொரு பிரதேசத்திலும் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உள்ளூர் அரசியலில் மிகவும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்களை நாங்கள் இனங்காண வேண்டும். எதிர்வரும் ஒவ்வொரு தேர்தலிலும் எமது இனம்சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்கா விட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறு போட்டுத் துண்டாடி எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும்" என்று தெரிவித்தார்.

"அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் போது எமது பிரதேசங்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்ற விடயத்தைப் பலரும் அறிந்திருப்பீர்கள். அண்மையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. எமது பிரதேசங்கள் அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல் அங்கு இருந்தது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அபிவிருத்திக் குழுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வுதவிகள் வழங்கும் நிகழ்வுகளில் புதிய வளத்தாப்பிட்டி வி.வினோகாந்த், ஆலையடிவேம்பு கே.ஏரம்பு கண்ணன், கோமாரி த.சுபோதரன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டார்கள்.

வி.ரி.சகாதேவராஜா...
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...