அர்ப்பணிப்புமிகு ஆளுமைக் கலைஞன் T.S. றஜித்

கலைஞர்கள் பலரையும் தந்த வரலாற்றுச் சிறப்புமிகு சுதுமலை மண்ணிலிருந்து கடந்த பத்தாண்டுகளாக பாடல்கள், நடிப்பு, குறும்படங்கள், நாடகங்கள் என பல்துறைசார் கலைஞனாய் அறியப்பட்டவர் றஜித். சிறுபராயம் முதலே கலைத்துறை ஈடுபாடு மிக்க ஒருவராய் விளங்கிய இவர் தனது பள்ளிக்காலத்தில் சுதுமலை சின்மய பாரதி வித்தியாலயம், மானிப்பாய் மெமோறியல்க் கல்லூரி ஆகியவற்றில் மேடை நாடகங்களை எழுதி இயக்கி இருக்கிறார். 

எழுத்துத் துறை சார்ந்து மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் ஈழ பக்திப் பாடல் என்ற சிறப்பு மிகு தளத்தில் இன்று நன்கறியப்பட்ட ஒருவராகவும் மிளிர்கிறார். 2012ஆம் ஆண்டு ஈழபக்திப் பாடல் துறையில் ஒரு பாடலாசிரியராக நுழைந்த றஜித் சுதுமலை அச்சாட்டி வைரவர் ஆலயம் மீது பாடப்பெற்ற 'அப்பனே வைரவா' என்ற இசைத் தொகுப்பின் வாயிலாக நன்கு அறியப்படத் தொடங்கினார். 

தன்னுடைய முதலாவது இறையிசைப் பாடலையே தாயகத்தின் பிரபல பாடகர் S.G சாந்தன் பாடியதை மிகவும் நெகிழ்ச்சியோடு கூறுகின்றார். 2012தொடங்கிய இவரது பாடல் பயணத்தில் இவர் இணுவில், சுதுமலை, பண்டத்தரிப்பு, கோண்டாவில் என அனைத்து பிரதேச ஆலயங்களிற்கும் பல இறுவட்டுக்களை உருவாக்கினார். தன்னைப் பாடல் உலகிற்குக் கொண்டு வருவதற்கான உந்துதலைத் தந்தவர் தனது மண்ணைச் சேர்ந்த சக பாடலாசிரியர் தினேஷ் ஏகாம்பரம் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார் றஜித். 

தென்னிந்திய இசையமைப்பாளர் அக்னி கணேஷின் இசையில் அந்நாளில் றஜித் உள்ளிட்ட பல கலைஞர்கள் பல இசைப்படைப்புகளை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக உமா சதீஷ், தினேஷ் ஏகாம்பரம், கௌரீஷன் போன்றவர்கள் பல படைப்புகளை சமகாலத்தில் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக தாயகப் பாடகரான எஸ்.ஜி. சாந்தனின் பல பாடல்கள் அந்நாளில் இவர்களது உருவாக்கத்தில் வெளியீடு கண்டன. தாயகத்தின் பிரபல இசையமைப்பாளர்களான அருணா கேதீஸ், சுதர்சன் போன்றவர்களும் இவர்களது பல பாடல்களை இசையமைத்துள்ளனர். 

பக்திப் பாடல் தளத்தில் இதுவரை நிலையான பாடல்களை எழுதியிருக்கின்ற றஜிதின் பல பாடல்கள் இன்றைக்கும் பிரசித்தம் பெற்ற பாடல்களாக பல இடங்களிலும் வலம் வருகின்றது. குறிப்பாக 'முருகா என்றழைத்தாலே உருகாதோ என் மனம்', கார்த்திகையில் வந்துதித்த' போன்ற பாடல்களும் பிரசித்தம் பெற்றவையாகும். இவருடைய சகோதரரான ஜீவாவும் மிகச் சிறந்ததொரு பாடலாசிரியர் ஆவார். 

பக்திப் பாடல்கள் தவிர்ந்து பொதுவான பாடல்கள், சமூக விழிப்புணர்வு சார்ந்த பாடல்களெனவும் பல பொதுவான பாடல்களையும் எழுதியிருக்கக் கூடிய றஜித்தின் பாடல்கள் எதுகை மோனைகள் இழையோட சந்தங்களோடு மிக அழகாக எப்போதும் பலரையும் கவரும் படியாக அமைந்து விடுவதுண்டு. 

ஈழத்துக் குறும்படத் துறையில் தனது வகிபாகத்தைக் காட்டியிருக்கக் கூடிய றஜித் அவர்கள் 2012ஆம் ஆண்டிலேயே ஒரு நடிகராக குறும்படத் துறைக்குள் நுழைந்து நடிப்பு, இசை, இயக்கம் என 20ற்கும் மேற்பட்ட குறும்படங்களில் பங்காற்றியுள்ளார். இலவு, பயங்கரம், 1929போன்ற படைப்புக்கள் இவற்றுள் முக்கியமானவை.  ஈழபக்திப் பாடற் தளத்தில் கணிசமான பங்களிப்பை மேற்கொண்டிருக்கக் கூடிய றஜித் பாடல்கள்,இதர படைப்பு சார் முயற்சிகள் எல்லாம் இவரது அயராத முயற்சியின் வெளிப்பாட்டின் காரணமாகவே இற்றை வரை இவருக்கான ஒரு தள அந்தஸ்தை வழங்கியிருக்கின்றது என சொல்லப் போனால் மிகையாகாது. இவருடைய கலைப் பயணம் இன்னுமின்னுமாய் தொடர்ந்து இன்னும் பல படைப்புக்கள் வெளி வரவேண்டும்.  

வெற்றி துஷ்யந்தன்


Add new comment

Or log in with...