காட்டுமிராண்டித்தனத்தின் இரு வருட துயர நினைவு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. முழு நாட்டையும் பெருந்துயரில் ஆழ்த்திய மிலேச்சத்தனமான அத்தாக்குதல்களின் துயரத்தில் இருந்து மக்கள் இன்னுமே மீளவில்லை.

இந்த துயர சம்பவத்தை நினைவு கூர்ந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவாப்பிட்டி தேவாலயம் உள்ளிட்ட நாடெங்கிலுமுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விஷேட ஆராதனைகள் இன்று இடம்பெறுகின்றன.

இத்தினத்தை முன்னிட்டு ஆராதனைகள் உள்ளிட்ட விஷேட நிகழ்வுகள் இடம்பெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம் இந்த துயர தினத்தின் நிமித்தம் இன்று காலை 8.45 மணி முதல் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு நாட்டின் அனைத்து மக்களையும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் நாட்டிலுள்ள சகல கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் இன்று விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நினைவு கூரும் வகையில் கட்டுவாப்பிட்டி கல்லறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. அத்துடன் மேரி ஸ்டெல்லா பாடசாலை மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி வீதி ஊடாக கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு செல்லும் மதப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இத்துயரத்தை நினைவுகூரும் வகையில் பலவித நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இரு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் மூன்று உல்லாச ஹோட்டல்கள் அடங்கலாக எட்டு இடங்களில் மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களின் விளைவாக 269 பேர் பலியானதோடு 500 பேர் காயங்களுக்கும் உள்ளாகினர்.

இந்நாட்டின் அண்மைக் கால வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான தாக்குதலே இதுவாகும். யாதுமறியா அப்பாவிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலை முஸ்லிம் தீவிரவாதிகள் குழுவொன்று மேற்கொண்டது. ஆனால் அமைதி, சமாதானம், அன்பு, கருணை மற்றும் மனித நேயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் இஸ்லாம் மார்க்கம் அங்கீகரிக்காத செயலையே இக்குழுவினர் மேற்கொண்டனர்.

இத்தாக்குதல் தொடர்பில் விசாரித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்விசாரணை அறிக்கையில் பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதோடு சிபாரிசுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் விஷேட கவனம் செலுத்தி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான சூழலில் இத்துயர நினைவு நாள் தொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடுகையில், 'உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எளிதாக நினைக்காது நாடு எதிர்கொள்ளப் போகும் பேரழிவிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச பின்னணியுடன் அடிப்படைவாத தீவிரவாதிகள் மேற்கொள்ளும் இத்தகைய தாக்குதல்கள் கத்தோலிக்கர்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுபவை அல்ல. அனைத்து இன, மத மக்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படலாம். நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட தீவிரவாதிகளும் தற்கொலைதாரிகளும் சமூகத்தில் உலாவுகின்றனர். இது விடயத்தில் அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். நாம் கத்தோலிக்க மக்களுக்காக மாத்திரம் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பௌத்த, இந்து, முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த அடிப்படைவாத தாக்குதல்களின் பின்னணி கண்டறியப்படும் வரை முழு நாடும் அச்சுறுத்தல் மிக்க நிலைமையிலேயே காணப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் நீதி நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அடிப்படைவாத தீவிரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு இந்நாட்டில் எல்லா இன, மத மக்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று சகவாழ்வுடன் ஒற்றுமையாக வாழும் நிலைமை தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து மக்களும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குவது மிகவும் இன்றியமையாததாகும்.


Add new comment

Or log in with...