ஈராக்கில் அமெரிக்க நிலை மீது ரொக்கெட் குண்டு தாக்குதல் | தினகரன்

ஈராக்கில் அமெரிக்க நிலை மீது ரொக்கெட் குண்டு தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருக்கும் விமானத் தளம் ஒன்றின் மீது இடம்பெற்ற ஐந்து ரொக்கெட் தாக்குதல்களில் இரு வெளிநாட்டு ஒப்பந்ததாரர்கள் மற்றும் மூன்று ஈராக் படையினர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கின் நட்பு நாடுகளான ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பதற்றத்திற்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பக்தாதின் வடக்காக உள்ள பலாத் விமானத் தளத்தில் கடந்த ஞாயிறன்று இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் விழுந்த இரு ரொக்கெட் குண்டுகளால் தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிச்சாலை சேதம் அடைந்துள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் எந்தத் தரப்பும் பொறுப்பேற்காதபோதும் அமெரிக்க துருப்புகள் மற்றும் இராஜதந்திரிகளை இலக்கு வைத்து ஈரான் ஆதரவுக் குழுக்கள் இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்த விமானத் தளத்தில் எப்–16 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதோடு பல பராமரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

வடக்கு ஈராக்கின் விமானநிலையம் ஒன்றுக்கு அருகில் அமெரிக்க கூட்டுப் படையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத்தாக்குதலில் கட்டடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டு சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...