20 செக் இராஜதந்திரிகளை வெளியேற ரஷ்யா உத்தரவு; பரஸ்பரம் நடவடிக்கை

செக் குடியரசைச் சேர்ந்த 20 இராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. 18 ரஷ்ய இராஜதந்திரிகளை செக் குடியரசு கடந்த சனிக்கிழமை வெளியேற்றிய நிலையிலேயே இந்த பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட ரஷ்ய இராஜதந்திரிகள் அந்நாட்டு உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று செக் குடியரசு உளவுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். 2014 இல் ஆயுதக் கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இவர்கள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டது.

குற்றம்சாட்டப்படும் இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற செக் குடியரசு 72 மணி நேர கெடு விதித்த நிலையில் செக் குடியரசு இராஜதந்திரிகளுக்கு ரஷ்யா ஒரு நாள் அவகாசம் வழங்கியுள்ளது.

செக் குடியரசின் முடிவு “முன் எப்போதும் நிகழாத ஒன்று” என்றும் “விரோதச் செயல்” என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

“செக் குடியரசு தமது எஜமானரையும் விஞ்சும் அளவுக்கு ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் அண்மைய தடைகளின் பின்னணியில் அமெரிக்காவை மகிழ்விப்பதற்கு அவர்கள் விரும்புகின்றனர்” என்றும் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

செக் குடியரசின் வெர்பெடிஸ் காட்டுப் பகுதி ஒன்றில் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் 2014 ஒக்டோபர் 16 ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்பில் அந்த களஞ்சியம் அழிவுக்கு உள்ளானது.

இந்த வெடிப்பு ஒரு விபத்து என்று கருதப்பட்டது. எனினும் செக் புலன்விசாரணையாளர்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றம்சாட்டினர்.

எனினும் இது ஆதாரம் அற்ற அபத்தமான குற்றச்சாட்டு என்று ரஷ்யா மறுத்துள்ளது.


Add new comment

Or log in with...