ரகித்த ராஜபக்‌ஷ பிணையில் விடுதலை

ரகித்த ராஜபக்‌ஷ பிணையில் விடுதலை-Accident-Rakitha Rajapaksha Released on Bail

ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில் கைதான விஜேதாஸ ராஜபக்ஷ எம்.பியின் மகன் ரகித்த ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை ரூபா 100,000 கொண்ட தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றிரவு (19) 10.45 மணியளவில் பாராளுமன்ற வீதியில் ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காரொன்றில் வந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, ரகித்த ராஜபக்‌ஷவுக்கும் காயம் ஏற்பட்டிருந்தது.

Range Rover ஜீப் வண்டியொன்று, புத்கம வீதியிலிருந்து பாராளுமன்ற வீதியை நோக்கி பயணித்த வேளையில், பொரளை திசையிலிருந்து பத்தரமுல்லை நோக்கி வந்த Wagon R வகை கார் ஒன்றும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது குறித்த ஜீப் வண்டியானது சிவப்பு சமிக்ஞை ஒளிரும் நிலையில் பயணித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக தெரிவித்த அவர், அதற்கமைய, ஜீப் வண்டியை செலுத்தி வந்த 32 வயதான ரகித்த ராஜபக்‌ஷ இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காரில் வந்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, காயம் காரணமாக, கொழும்பு டேர்டன்ஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரகித்த ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டிருந்தார்.


Add new comment

Or log in with...