உருவகக்கதை இலக்கியத்தில் சுடர் விடும் எஸ்.முத்துமீரான்

இலங்கை இலக்கிய வானத்தில் உருவகக் கதைத் துறையில் ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளில் எஸ். முத்துமீரான் பெயர் சுட்டிச் சொல்லக் கூடிய  புகழ் பெற்ற ஒருவராவார். மக்களைச் சிந்திக்க வைப்பதில் உருவகக் கதைகள் இலக்கிய உலகில் பெரும் பங்களிப்பைச் செய்கின்றன. ஞானிகளும் அறிவோரும் தங்கள் அறிவுரைகளையும் சமய ஒழுக்கங்களையும் மக்களுக்கு உணர்த்துவதற்கு உருவகக் கதைகளைச் சிறப்பாக கையாண்டுள்ளனர். 

சிறுகதைகள், நெடுங்கதைகள் என்பன உலகில் உருவாவதற்கு முன்னரே உருவக் கதைகள் தோன்றின. நெடுங்கதைகள் மூலம் நிலைத்திருக்க முடியாத நீதிகளை, ஒழுக்கநெறிகளைச் சின்னஞ் சிறிய உருவகக் கதைகள் மூலம் மக்கள் மனதில் நிலை நிறுத்த முடியும் எனும் உண்மையை சான்றோர் ஆய்ந்து கூறியுள்ளனர்.

இலக்கிய உலகில் உருவகக் கதைகள் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன.   வாழ்க்கையின் உண்மைகளைத் தத்துவ நோக்கில் எடுத்துக் கூறுகின்ற போது, கற்பனை நயத்தினையும் உண்மையையும் கவிதைத் தன்மையினையும் சொல்நடை அழகினையும் ஒன்று சேர்த்து வளம் சேர்த்து இருக்கின்றார்கள் இலக்கியவாதிகள்.

உலகில் ஆங்கில எழுத்தாளர் ஒஸ்கார்  ஒயில்ட், ரஷ்ய எழுத்தாளர் ஜவான் துர்கனேவ், பாரசீக படைப்பாளி கலீல் ஜிப்ரான், மராட்டிய படைப்பாளி வி.ஸ.காண்டேகர் போன்றவர்களைத் தொடர்ந்து இந்தியாவில் தமிழில் பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன், கலைமகள் பத்திரிகை ஆசிரியர் கி.வ. ஜெகநாதனின் மகன்  ஜ.சாமிநாதன் போன்றவர்கள் நல்ல உருவகக் கதைகளைப் படைத்தனர்.

இதைத் தொடர்ந்து இலங்கையில் சு.வே., எஸ்.பொ, செம்பியன் செல்வன், செங்கையாழியான், எஸ்.முத்துமீரான் போன்றவர்களும் இவர்களோடு இன்னும் சில எழுத்தாளர்களும் உருவகக் கதைகளைப் படைக்கத் தொடங்கினர்.    இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ்மொழியில் சிறுகதை, கவிதை, நாவல் வளர்ந்த அளவிற்கு உருவகக் கதை வளர்க்கப்படவில்லையென்ற போதிலும், படைப்பாளி எஸ்.முத்துமீரான் சோர்வடையாது இன்றும் இம்முயற்சியில் தொடர்ந்து ஆர்வம் காட்டி நல்ல உருவகக் கதைகளை படைத்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.

மனித சமுதாயத்தின் அறிவீனத்தையும் பலவீனத்தையும் அகங்காரத்தையும் அழித்தொழிக்க பகுத்தறிவற்றவைகளின் மூலம் நல்ல படிப்பினைகளை எஸ். முத்துமீரான் தன்னுடைய உருவகக் கதைகளின்  வாயிலாக சின்னஞ்சிறு குழந்தைகளும் அறிவு பெறும் நிலையில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். முத்துமீரான் நூற்றுக்கு மேற்பட்ட உருவகக் கதைகளைப் படைத்திருக்கிறார் என்பது வியப்பைத் தருகிறது. தற்பொழுது இக்கதைகளின் தொகுப்பாக அவரின் இரு நூல்கள் வெளிவந்துள்ளன. இவருடைய  முதற் தொகுதியான ‘உருவகக் கதைகள்’ நூல் தென்னிந்தியா  கூத்தாநல்லூர் தென்றல் மன்றத்தினால் 25-02-1982ம் ஆண்டு கவிஞர் திலகம்  சாரணபாஸ்கரனால் வெளியிடப்பட்டது.

தீந்தமிழ் காப்பியம் ‘யூசுப் சுலைஹா’வின் சிருஷ்டி கர்த்தா கவிஞர் திலகம்  சாரணபாஸ்கரன், எஸ். முத்துமீரான் பற்றியும் அவருடைய உருவகக் கதைகள் பற்றியும் எழுதியுள்ள கவிதையை இங்கு குறிப்பிடுவது சிறப்பாகும்.

‘மனத்திலெழும் உணர்வுகளுக்கு வடிவம் செய்ய
வானுலவும் கதிர்மதியைப் பேச வைத்து
வனத்துலவும் விலங்கினத்தின் உயர்வைச் சொல்லி
மானிடர்தம் இழிசெயலை இடித்துக் காட்டி
குணத்தினிலும் செயலினிலும் மாற்றம் காணக்
கூவுகின்ற கலைக் குயிலாய் கொள்ளைக் குன்றாய்
எனைக் கவர்ந்து அருங் குணத்தான் முத்துமீரான்
இயற்றுகின்ற உருவகத்தைப் போற்றுவோமே’

முத்துமீரான் தன் ஆற்றலையும் ஆர்வத்தையும் தனது உருவகக் கதைகளின் மூலம் என்றும் அழியாத இறைவனின் இயற்கையையும் இறைத்தன்மையின் சக்திகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் அதன் உண்மைகளையும் பல்வேறுபட்ட மிருகங்கள், ஜீவராசிகள், இயற்கை சக்திகள் வழியாக காண்பிப்பது சிறப்பாக இருக்கிறது.

கடந்த 65வருடங்களுக்கு மேலாக இடைவிடாது இலக்கியப் பணி ஆற்றி வரும் முத்துமீரான் இருநூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களையும்,  நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் நாட்டார் இலக்கிய கட்டுரைகளையும் உருவகக் கதைகளையும் எழுதியுள்ளதோடு,  இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் மூன்று கவிதைத் தொகுதிகளையும் ஒரு நாடகத் தொகுதியையும் ஏழு நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்களையும் படைத்தளித்து ஈழத்து இலக்கியத் துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரையில் முஸ்லிம்களின் நாட்டார் இலக்கியத்தில் பல சிரமங்களுக்கிடையே கள ஆய்வு மேற்கொண்டு, வியக்கத்தக்க  முறையில் தேடுதல் செய்து ஏழு நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்களைத் தந்துள்ள எஸ். முத்துமீரான் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் பங்கு கொண்டு ‘இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் வழங்கி வரும் தாலாட்டுப் பாடல்கள்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படித்து பாராட்டைப் பெற்றமை நாட்டுப்புறவியலில் இவருக்குள்ள தனித்துவத்தைக் காட்டுகிறது.

இவரின் உருவகக் கதைகள், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் கலைமகள், மலேசியாவிலிருந்து வரும் நம்பிக்கை போன்ற பத்திரிகைகளோடு இலங்கையின் தேசியப் பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, சாரதா, தினக்குரல் ஆகியவற்றிலும் மல்லிகை, ஞானம், ஜீவநதி, வானவில் ஆகிய மாதாந்த வெளியீடுகளிலும் இடம்பெற்று, இவருக்கு புகழை ஏற்படுத்திக் கொடுத்தன. சிறந்த நாட்டாரியல் ஆய்வாளரான முத்துமீரான் இலங்கையில் இத்துறைக்கு கிடைத்த பெருமைக்குரியவராவார். 

அவர் தனது இரண்டாவது உருவகக் கதைத் தொகுதியான 'இயற்கை'யை 1999ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள மீராஉம்மா நூல் வெளியீட்டகம் மூலம் வெளியிட்டார். அத்தொகுதிக்கு  அணிந்துரை அளித்துள்ள பிரபல தென்னிந்திய இலக்கிய விமர்சகரும் சிறந்த படைப்பாளியுமான   வல்லிக்கண்ணன் 'வாழ்க்கை கற்றுத் தருகின்ற உண்மைகளையும்  பல்வேறு  மிருகங்கள், ஜீவராசிகள், இயற்கையின் சக்திகள் மூலம் கதாபாத்திரங்களாக்கி  அழகிய முறையில் இத்தொகுதியிலுள்ள உருவகக்கதைகளை உருவாக்கிய முத்துமீரான் தன் ஆற்றலையும் ஆளுமையையும் நிரூபித்திருப்பது பாராட்டத்தக்கதே' என்று குறிப்பிட்டிருப்பது நல்ல சான்றெனக் கருதலாம்.

முத்துமீரானின் உருவகக் கதை தொகுதிகள் இரண்டும் தென்னிந்தியாவில் வெளியிடப்பட்டிருப்பது இத்துறையில் இவருக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். ஒவ்வொரு உருவகக் கதைத் தொகுதியிலும் நூற்றுக்கு மேற்பட்ட கதைகள் உள்ளன. உருவகக் கதைகள் மேலோட்டமான, மிக அந்தரங்கமான, ஆழமான செய்திகளைக்  கொண்டன.

ஈழத்தமிழ் இலக்கியத்தில் துணிவோடு நின்று தரமான உருவகக் கதைகளைத் தொடராகத்  தந்து கொண்டிருக்கும் முத்துமீரான் என்றுமே பாராட்டுக்குரியவர்

பகிர்வு:
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
செயலாளர்,  நிந்தவூர் பிரதேச கலாசார அதிகார சபை


Add new comment

Or log in with...