ஒந்தாச்சிமடம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சர்க்கரைப் பொங்கல் சக்தி விழா

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சர்க்கரைப் பொங்கல் சக்தி விழா இன்று நடைபெறுகிறது.

சக்தியின் வழிபாட்டினால் கிழக்கெங்கும் விழாக்கோலம் பூணும் ஆரம்ப சக்தி விழாவாக ஓந்தாச்சிமடத்தினில் அமையப் பெற்ற ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் ஆதிபராசக்தியான ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் இவ்விழா நடைபெறுகின்றது.

ஆலய மூலஸ்தானத்தின் எதிரே அமைந்துள்ள தீர்த்தக் கிணற்றுக்கும் கதிர்காமம் மாணிக்க கங்கைக்கும் இடையே தொடர்பு உள்ளதால் பிணி தீர்க்கும் தீர்த்தமாக இக்கிணற்று நீர் பாவிக்கப்படுகின்றது. குறித்த கிணற்றினுள் பாரம்பரிய கல்வெட்டு காணப்படுவது  வரலாற்று  சான்றாக உள்ளது.

ஒந்தாச்சிமடம் கிராமத்தில் முதன் முதலில் ஆரம்பமான இப்புனித பதியானது சிவனால் அம்மையே என அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் புனித பதியாகிய காரைக்காலிலிருந்து கொண்டு வரப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

‘தென்னைமரம் நூற்றை வைத்தான், புன்னைமரம் நூற்றை வைத்தான் திருக்கிணற்றைக் கட்டி வைத்தான் கண்ணன் எனும் ஓந்தாச்சி கைலாயம் நேர்ந்தாண்டி’ எனும் சரஸ்வதிப் புலவரின் பாடலில் ஓந்தாச்சி என்பவர் கொடை வள்ளலாகவும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்தும் ஏனைய மதங்களை மதித்தும் வாழ்ந்துள்ளார்.

மடம் என்று அழைக்கப்படும் ஆலயத்தின் முன்னே நீர்ச்சுனை அமைத்து கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களை தங்க வைத்தும் உபசரித்தும் வந்தார். இவ்ஆலயத்திலே பண்டைய காலம் முதல் சிவ வழிபாட்டை முன்னிலைப்படுத்தி சிவராத்திரி விரதமும் சக்தி வழிபாட்டை முன்னிலைப்படுத்தி சர்க்கரையமுதும் மாரியம்மன் பத்தாசி முறையில் செய்து வருகின்றனர்.

1957இல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஆலயத்தின் அருகாமையில் குடியிருந்த மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தபோது ஊரில் உள்ள மக்களின் நலன் மற்றும் மாணவர்களின் கல்வி உயர்வு கருதி சமூகப் பணியாக கிராமத்தின் கல்வி மேம்பாட்டிற்காக அந்த நிலத்தை ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு ஆலய அறங்காவலர்கள் நன்கொடையாக வழங்கினர்.

ஓந்தாச்சிமடம் தெய்வங்களுக்கு உகந்தபதி. அதற்குச் சான்றாக தெற்கினிலே கற்பகக் கொழுந்துவான ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்துடன் கூடிய ஆற்றங்கரையோரம் குறித்த மாரியம்மன் ஆலயமும்,வடக்கினிலே வட பத்திரகாளியம்மன் ஆலயமும், கிழக்கினிலே ஆழிப் பெருங்கடல் மேற்கினிலே ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயமும் நடுவினிலே விஷ்ணு ஆலயமும், நாகதம்பிரான் ஆலயம் மற்றும் சுனாமி குடியேற்றத்தை அண்டிய ஸ்ரீ சிவசக்தி ஆலயம் என்பனவும் அமைந்துள்ளன.

இத்தனை வல்லமை கொண்ட அன்னையின் வருடாந்த சக்தி விழா இன்று செவ்வாய்க்கிழமை மாலை  ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து அம்மனை எழுந்தருளப் பண்ணி பாரம்பரிய முறையில் ஊர்வலமாக வந்து கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.

அஞ்ஞான இருள் அகற்றி மெய்ஞானம் எனும் அருள் ஒளி தரும் அன்னையின் சடங்கினிலே  புதன் (21) மற்றும் வியாழக்கிழமைகளில் (22) காலை மதியம் விசேட பூஜையைத் தொடர்ந்து மாலை ஊரின் பிரதான வீதிகளைக் காவல் பண்ணல் இடம்பெறும். இவ்வேளையின் வீதிகள் தோறும் மங்கலப் பொருட்களைக் கொண்டு பூரண கும்பம் வைத்து அம்மனை தரிசிப்பர்.

வெள்ளிக்கிழமை காலை (23) மதியம் விசேட பூஜையைத் தொடர்ந்து சர்க்கரைப் பொங்கலுக்காக பிற்பல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்மக்கள் புடைசூழ வாழைக்குலைகள் எடுத்து வந்து பழுக்கப் போடுதல் இடம்பெறும்.

சனிக்கிழமை (24) அதிகாலை கும்பம் சொரிதல் மாலை அம்பாள் முத்துச் சப்பரத்தில் ஆரோகணித்து வீதிகளில் வலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறும்.ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகலில் விநாயகப் பானைக்கு நெல் குற்றுதலும் இரவு விசேட பூஜையும் இடம்பெறும்.

திங்கட்கிழமை (26) அதிகாலை சக்தி யாகம், அபிஷேகம், பூரண கும்பம் நிறுத்துதல், விநாயகப் பானை எழுந்தருளப் பண்ணுதல், காத்தான் கன்னிமார் வைத்தல் மற்றும் மாலையில் காத்தான் கன்னிமார் சகிதம் ஆலயத்திற்கு முன் நிறுத்தப்பட்டு உடுக்கொலி முழங்க கர்ப்பூரச் சட்டி ஏந்தும் அடியார்கள், அங்கப்பிரதட்சணை செய்யும் அடியார்கள் சகிதம் ஆலயத்தை வலம் வந்து அம்மனின் மூலஸ்தானத்தின் எதிரே விநாயகப் பானை ஏற்றுவதைத் தொடர்ந்து அடியார்கள் சர்க்கரைப் பொங்கலிட்டு பூஜை ஒப்புக் கொடுத்து தங்களது நேர்த்திளை நிறைவு செய்வர்.

செவ்வாய்க்கிழமை (27) இரவு வைரவர் பூஜையும் மற்றும் வெள்ளிக்கிழமை (30) நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவும் நடைபெற்று அன்னை ஆதிபராசத்தியின் வருடாந்த கிரியைகளுடன் நிறைவுறும்.

கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ஏ.குமாரலிங்கம் குரு தலைமையில் நடைபெறவுள்ளதோடு யாக பூஜை ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பி.கஜேந்திரக் குருக்கள் தலைமையில் நடைபெறும்

சிவம் பாக்கியநாதன்
(மாநகரசபை உறுப்பினர், மட்டக்களப்பு)


Add new comment

Or log in with...