மீண்டுமொரு அலை உருவாகாமல் விழிப்புணர்வை கடைப்பிடிப்போம்! | தினகரன்

மீண்டுமொரு அலை உருவாகாமல் விழிப்புணர்வை கடைப்பிடிப்போம்!

இலங்கை சுகாதாரத் துறையினரதும் பாதுகாப்பு தரப்பினரதும் கடும் அர்ப்பணிப்பு மிக்க நடவடிக்கைகளின் ஊடாக கொவிட் 19 தொற்றின் இரண்டாம் அலை கடந்த பெப்ரவரி மாதம் முதல் பெருவீழ்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு சுகாதார வழிகாட்டல்கள் பெரிதும் உதவியுள்ளதோடு, தடுப்பூசி வழங்கலும் பக்கத் துணையாக அமைந்துள்ளது. என்றாலும் இத்தொற்று இன்னும் முழுமையான கட்டுப்பாட்டு நிலையை அடையவில்லை.

இதே காலப் பகுதியில் இந்தியா, பங்களாதேஷ், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்தொற்று மீண்டும் தீவிரமாகப் பரவும் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் இலங்கை மக்கள் தமிழ்- சிங்கள புத்தாண்டுக்குத் தயாராகவும் ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் நாட்டினதும், பிராந்திய மற்றும் உலகினதும் கொவிட் 19 தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இத்தொற்று தவிர்ப்புக்கான முக்கிய சுகாதார வழிகாட்டல்களாக விளங்கும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவுதல் உள்ளிட்ட சுகாதார பழக்கவழக்கங்களை உச்சளவில் பேணிக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையினரும் பாதுகாப்பு தரப்பினரும் அடிக்கடி அறிவுறுத்தல்களை வழங்கி வந்தனர். தவறும் பட்சத்தில் புத்தாண்டின் பின்னர் இத்தொற்று மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்க்க முடியாது என்றும் சுட்டிக் காட்டினர்.

இருந்தும் இக்கோரிக்கை தொடர்பில் மக்கள் கவனயீமாக நடந்து கொண்டதோடு புத்தாண்டுக்கு தயாராவதற்காக உடுதுணிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதில் காண்பித்த ஆர்வத்தை இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் வெளிப்படுத்தவில்லை. இது துரதிர்ஷ்டகரமான நிலைமை என சுகாதாரத் தரப்பினர் கவலை வெளியிட்டிருந்தனர்.

புத்தாண்டு நிறைவுற்றுள்ள தற்போதைய சூழலில் நாட்டின் சில பிரதேசங்களில் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகின்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்திருக்கின்றார்.

அந்த வகையில் தேசிய வங்கியொன்றின் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிளைகளில் கடமையாற்றும் ஊழியர்கள் 11 பேர் இத்தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு குருநாகல் மாவட்டத்திலுள்ள கனேவத்த சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட தித்தவெல்கால பிரதேசத்தில் 31 பேர் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் விளைவாக அப்பிரதேசத்தில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு பிரதேசத்திற்கு பயணக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர, அடுத்துவரும் 4 - 6 வாரங்களில் கொவிட் 19 தொற்று நாட்டில் மீண்டும் அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு புத்தாண்டின் நிமித்தம் இருப்பிடங்களுக்கு திரும்பிய மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணப் பிரதேசங்களுக்கு நேற்று முதல் திரும்பவும் ஆரம்பித்துள்ளனர். அதனால் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில் மக்கள் உச்ச கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.

மேலும் கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கான தேசிய நடவடிக்கைகள் மையத்தின் தலைவரான இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, 'கொவிட் 19 தொற்றின் மூன்றாவது அலை தோற்றம் பெறுவதைத் தவிர்த்துக் கொள்ளவென நாட்டின் அனைத்து மக்களும் பொறுப்புடன செயற்பட வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்க்கும் நோக்கில்தான் இவ்வாறான அழைப்புகளும் முன்னெச்சரிக்கைகளும் விடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. இத்தொற்றின் முதலிரு அலைகளையும் கட்டுப்படுத்தவென கடும் சிரமத்தை நாடு எதிர்கொண்டது. அதனால் அவ்வாறான நிலைமை நாட்டில் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான பணியில் ஈடுப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆகவே இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் கவனயீமாகவோ அசிரத்தையுடனோ நடந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதன் ஊடாக இத்தொற்று மீண்டும் தலைதூக்குவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இது ஆளுக்காள் தொற்றி பரவும் ஒரு தொற்று நோயாக இருப்பதால் இதன் பரவுதல் தொடரைத் துண்டிக்கும் பொறுப்பு மக்களிடமே உள்ளது. அதனால் சுகாதார வழிகாட்டல்களை உரிய ஒழுங்கில் பேணிச் செயற்படும் போது இத்தொற்று தீவிரமடைய வாய்ப்பே இருக்காது.


Add new comment

Or log in with...