அமைதியான வாழ்வுக்கு குந்தகம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது! | தினகரன்

அமைதியான வாழ்வுக்கு குந்தகம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது!

யாழ்.குடாநாட்டில் அன்றாடம் இடம்பெறுகின்ற வன்முறை சம்பவங்கள் மக்களுக்கு அச்சமும் கவலையும் தருகின்றன. ஆங்காங்கே இடம்பெறுகின்ற வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைகள், கோஷ்டி மோதல்கள் என்றெல்லாம் யாழ்குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பிரதானமாக, இளவயதினர் மத்தியில் இவ்வாறான வன்முறை சுபாவம் படிப்படியாக அதிகரித்து வருவதையே யாழ்குடாநாட்டின் சமீப கால நிலைமைகள் புலப்படுத்துகின்றன. அமைதியை விரும்புகின்ற மக்களைப் பொறுத்த வரை இவ்வாறான வன்முறை சம்பவங்கள் விரும்பத்தகாதவை ஆகும்.

யாழ்குடாநாட்டின் சில பிரதேசங்களில் வாள்வெட்டுக் குழுக்கள் என்ற பேரில் ஓரிரு வன்முறைக் குழுக்கள் நடத்துகின்ற அராஜகமானது மக்களுக்கு அச்சம் தருவதாகும். இளவயதினரே அச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இக்குழுக்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இவை தவிர, சாதாரண மனவிரோதங்களை வைத்துக் கொண்டே பழி தீர்க்கும் வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளைப் பார்க்கையில், அச்சம் ஏற்படுகின்றது. தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்குள் சமீபத்தில் புகுந்த கும்பலொன்று அங்கிருந்த மாணவர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் இதற்கான ஒரு உதாரணம் ஆகும்.

இவ்வாறான வன்முறை சுபாவத்தை மேலும் வளர விடுவது ஆரோக்கியமானதல்ல. இவை போன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். பொலிசாரால் மாத்திரமே இவற்றைத் தடுக்க முடியுமென எவரும் எதிர்பார்க்கக் கூடாது. அங்குள்ள சமூகநலனில் அக்கறை கொண்ட நிறுவனங்களும் இந்த விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.

யாழ்குடாநாடு முன்னொரு காலத்தில் ஏனைய பிரதேச மக்கள் பாராட்டும்படியான நிலைமையில் இருந்ததை நாம் மறந்து விட முடியாது. கல்வி, பொருளாதார முயற்சிகள், சமய கலாசார பாரம்பரியம் என்றெல்லாம் மற்றைய பிரதேச மக்களுக்கு முன்னுதாரணமான பிரதேசமாகவே யாழ்குடாநாடு அன்று விளங்கியது.

மற்றையோரின் உதவியினாலன்றி சுயமுயற்சியினால் வாழ்வில் முன்னேற்றமடையக் கூடியவர்கள் யாழ் மக்கள் என்று அக்காலத்தில் பொதுவானதொரு நம்பிக்கை நிலவியதுண்டு. அரச வேலைவாய்ப்பு விடயங்களில் பின்கதவு வழியாக அரசியல் சலுகையைப் பயன்படுத்தி உச்சத்தைப் பிடிக்கின்ற போக்கு யாழ் மக்களிடம் கிடையாதெனவும் அன்று கூறப்பட்டதுண்டு.

அதாவது சுயதிறமையினால் உச்ச இலக்குகளை அடையக் கூடிய ஆற்றல் மிக்க சமூகமெனப் பாராட்டப்பட்டவர்கள் யாழ்குடா மக்கள். அதேசமயம் பாரம்பரிய கலாசாரப் பண்புகளையும் சுயமுயற்சியையும் பேணி வருபவர்களாகவும் அவர்கள் திகழ்ந்தனர். ஆனால் இன்று இடம்பெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கையில் கவலை தோன்றுகின்றது.

ஒரு சில வன்முறைக் கும்பல்கள் நிகழ்த்துகின்ற அராஜக சம்பவங்களால் ஒட்டுமொத்த மக்களுக்குமே அவப்பெயர் ஏற்படுவதை ஒருபோதுமே அனுமதிக்க முடியாது. அமைதியை வேண்டுகின்ற மக்களுக்கு இவ்வாறான சம்வங்கள் அச்சமூட்டுவதையும் பார்த்துக் கொண்டிருக்கலாகாது. வன்முறை சம்பவங்கள் தடுக்கப்படுவது அவசியம்.

வடக்கில் இன்று ஆங்காங்கே இடம்பெறுகின்ற சம்பவங்கள் அன்றைய ஆயுதப் போராட்டத்தின் பக்கவிளைவுகள் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுமார் மூன்று தசாப்த காலம் ஆயுதப் போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து பழகியதன் காரணமாக இன்றைய இளவயதினர் பலரிடம் வன்முறை சார்ந்த சுபாவமும் வளர்ந்துள்ளதென்றே அவர்கள் கருதுகின்றார்கள்.

ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு தசாப்த காலம் கடந்து விட்ட போதிலும், அதன் தாக்கங்கள் முற்றாக அம்மண்ணில் இருந்து நீங்குவதற்கு சில காலம் செல்லக் கூடுமென்பதே உளவியலாளர்களின் கருத்தாகவும் உள்ளது. எது எவ்வாறாக இருந்த போதிலும், ஆரோக்கியமான சமூகமொன்றுக்கு வன்முறை சம்பவங்கள் பொருத்தமானதல்ல. அங்கு இடம்பெறுகின்ற வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலேயே மக்கள் நிம்மதியாக வாழ வழியேற்படும்.

மக்கள் மத்தியில் அமைதியைக் குலைக்கின்ற நாசகார கும்பல்களை ஒடுக்குகின்ற கடமை பொலிசாருக்கே உள்ளது. இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு சற்றேனும் தயக்கம் காட்டுதல் கூடாது. மக்களுக்கு அமைதியாக வாழ்கின்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்ற பொறுப்பு பொலிசாருக்கே உள்ளது. அவர்கள் தருகின்ற பாதுகாப்பை நம்பியே மக்களும் உள்ளனர்.

அதேசமயம் யாழ்குடாநாட்டில் செயற்படுகின்ற மக்கள்நல நிறுவனங்களின் ஆதரவு பொலிசாருக்கு இவ்விடயத்தில் அவசியமாகின்றது. யாழ்குடாநாட்டில் வன்முறைகளைக் கட்டுப்படுத்தி, மக்களின் அச்சத்தைப் போக்கி, அமைதியான சூழலை உருவாக்குவதற்கு சமூகநல நிறுவனங்கள் தங்களது முழுமையான ஆதரவை பொலிசாருக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம்.


Add new comment

Or log in with...