நோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும் | தினகரன்

நோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும்

வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டிய மனிதத்தின் உடலானது நொய்ந்துபோன நிலையில் தோன்றுவது நோய் பிணித்திருப்பது பிணி. அது உடலையும் பிணித்திருக்கிறது; உயிரையும் பிணித்திருக்கிறது.பிறவிப்பிணி என்று தமிழ் இலக்கியங்கள் பேசுகிற பிணி, உயிர்ப்பிணி. உடலைப் பிணித்த பிணியின் தொடர்ச்சியே நோய்.

காற்றுத்தேவன் புடைத்து நொறுக்கிவிடும் பொருள்களைப் பட்டியலிடுகிற மகாகவி பாரதி, நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை, நொய்ந்த மரம் நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம் என்பனவற்றை நிறுத்துகிறார். நொய்ந்துபோன உடலும் உள்ளமும் கொண்ட உயிரை எளிதாகக் காலன் எடுத்துச் செல்கிற காலகட்டம் இது. வீடே உலகமாய் ஒடுங்கிய இந்த நாளில், வீட்டைப்போலவே, திண்ணமுறக் கட்டவேண்டியது உடலை. உடலைக் கட்டினால் உயிரைக் கட்டலாம் என்பது உணரத்தக்க உண்மை.

வீடுகள் எவ்வளவுதான் பாதுகாப்பானவை என்றாலும் வீட்டின் உள் இருப்போரை விழுங்கிவிடக் காத்திருப்பது பசி. உடலைப் பற்றி, உயிரை விழுங்கும் பிணியைப் பசி என்று கண்ட நம் முன்னோர் பசிப்பிணி என்று அதற்குப் பெயரும் சூட்டினர். அது முறைப்படி தீர்க்கப்படாவிட்டால், முறை பிறழும்; அனைத்துப் பாவங்களையும் செய்யத் தூண்டும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.பசிப்பிணி என்னும் பாவி என்கிறது மணிமேகலை பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்று பட்டியலிடுகிறார் ஔவையார்.வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்று கட்டளையிடுகிறார் பாரதி.

பசிப்பிணி போக்கும் உணவை அமுதம் என்றே அழைத்தனர் தமிழர். அமுதம் வானவர்க்கு உரியது என்று புராணங்கள் பேசுகின்றன. அது புனைவோ மெய்யோ, ஆனால், வான் அமிழ்தம் என்று வள்ளுவர் காட்டுவது வான்மழையை. தானும் உணவாகித் தரணியில் வாழும் எல்லாவுயிர்களுக்கும் உணவாகும் அனைத்தையும் உருவாக்கும் மூல காரணியாய் அது திகழ்கிறது என்கிறார். அது கடவுளை நிகர்த்த கருணை உடையது. அவர்க்கு முன்னமே, மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே என்று பாடிப் புகழ்ந்தவர் கபிலர்.

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதும், பசித்த வயிற்றுக்கு அன்னமிடுதலும் புண்ணியம் எனக் கொண்டனர் முன்னோர். அதனால்தான், தண்ணீர்ப் பந்தல்களும், அன்ன சத்திரங்களும் நாடெங்கும் நிறுவப்பெற்று நல்லறம் பேணப்பட்டது. இதனை முன்னிறுத்தியே தமிழகத்து விழாக்களைத் திட்டமிட்டு நடத்தவும் செய்தனர்.

நீரும் சோறும் புனிதமானவை; பேணப்பட வேண்டியவை. அதனால்தான் தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்ற அனுபவ வாசகம் மக்களிடைப் புழக்கம் ஆனது. ஒரு சோறு சிந்தினால் ஒரு நாள் பட்டினி என்ற எளிய தத்துவம் எழுதப் படிக்கத் தெரியாத பாமரத் தாய்மார்களின் வாய்வழி வந்து பழக்கம் ஆனது. இவ்விரண்டையும் எல்லாரும் எப்போதும் தடையின்றிப் பெறவேண்டி முறை செய்யும் அரசை, உயிர் எனக் கொண்டாடியது புரனூறு.

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிக்கை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே

என்று பாடினார் மோசிகீரனார். தன்னுயிர் போல, மன்னுயிர் அனைத்தையும் பேணிக் காத்த தசரதனை,உயிரெலாம் உறையும் ஓர் உடம்பும் ஆயினான் என்று கம்பர் பாராட்டுகிறார்.

அப்படி எல்லாவுயிர்களையும் இனிது பேணியவர்களாக மன்னர்கள் திகழ்ந்தனர். அவர்கள் முறைபிகிறபோது, புலவர்கள் அறம் உரைத்து ஆற்றுப்படுத்தினர். மக்களின் பிரதிநிதிகளாக அவர்களே விளங்கினர். தகுதிசால் வள்ளல்களைப் பாடிப் பெற்ற பரிசில்களைத் தனக்கெனக் கொள்ளாமல் தன்னைப்போல் வறுமையில் வாடிய மக்களுக்கு வாரி வழங்கினர்.

குமணவள்ளலைப் பாடிப் பரிசு பெற்ற பெருஞ்சித்திரனார், தன் மனைவியிடம்,உன்னை விரும்பி வாழ்பவர்களுக்கும், நீ யாரை விரும்பி வாழ்கிறாயோ அவர்களுக்கும், உன்னைப் பின்பற்றிக் கற்றுக்கொண்டு வாழும் உன் சுற்றத்தார்களுக்கும், உனக்கும் பசி போக்கக் கடனாகக் கொடுத்து உதவியவர்களுக்கும், இன்னாருக்கு என்று கணக்குப் பார்க்காமல், என்னை எதும் கேட்காமல், எல்லாருக்கும் வழங்குவாயாக என்று கூறினார் (புரனூறு-163).

ஈத்துவக்கும் இன்பமே பேரின்பம் என்று கண்டவர்கள் அவர்கள். அதனால்தான், ஈதல் இசைபட வாழ்தல் உயிர்க்கு ஊதியம் என்று உணர்ந்து உரைத்தார் திருவள்ளுவர். கடலன்ன செல்வம் இருந்தாலும் உண்பது நாழிதான், உடுப்பவை இரண்டே எனச் சொன்ன மதுரை நக்கீரனார், செல்வத்துப் பயனே ஈதல் என்று உணர்த்தினார்.

இறைக்கிற கிணறே சுரக்கும். கொடுக்கிறவர்களுக்கே கிடைக்கும் என்பது மக்களின் அனுபவ நம்பிக்கை. அள்ளிக் கொடுக்க முடியாதபோது, கிள்ளியாவது கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தனர்.

எல்லாராலும் எல்லா அறங்களும் பின்பற்றுதல் என்பது சாத்தியமில்லை. ஆனால், தவிர்க்கக்கூடாது என்பதால், அறம் செயவிரும்பு என்று ஔவையார் அறிவுறுத்தினார். விருப்பம் எவ்வகையிலாவது செயல் வடிவாகிவிடும் என்பது இயற்கை நியதி.

தன்னிடம் இருப்பதைக் கொடுப்பதல்ல, தானம்; தன்னிடம் வந்து இரப்பவர்க்கு என்ன தேவை என்று தருவதே தானம்; அது கடவுள் நிலைக்கு மனிதனை உயர்த்துவது. அதனால்தான், புல்லாக இருந்தாலும், பூவாக இருந்தாலும் சமமாக ஏற்றுக்கொள்பவன் இறைவன். அதுபோல், எவராக இருந்தாலும் பேதம் பாராமல் அவர்களுக்கு உரியன வழங்கியவன் பாரி என்று வள்ளல் தன்மைக்கு இலக்கணத்தை வரையறுத்துச் சொல்லிக் கொடுத்தவர் கபிலர்.

இத்தனைக்கும் வேள்பாரி முடியுடை வேந்தன் அல்லன்; பறம்புமலையாண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களை அடுத்துக் குறுநில மன்னர்கள் கொடையாளர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்குக் கம்பனைப் புரந்த சடையப்ப வள்ளல் ஒரு சான்றாளன். பின்னர் இடைக்காலப் புலவர்களைத் தங்களால் இயன்ற அளவு பேணிய வள்ளல்கள் சிற்றிலக்கியங்களில், சின்னஞ்சிறு தனிப்பாடல்களில் நிலைபெற்றிருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் பின்னர் வந்த வள்ளல் யார் என்று கேட்போர்க்குக் காலம் தந்த பதில், வடலூர் தந்த இராமலிங்கர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிடும் உள்ளமும், பசித்தோர்க்கு இரங்கி உணவளிக்கும் பண்பும் எவருக்கெல்லாம் இருக்கின்றனவோ, அவர்களுக்குள் இந்த வள்ளல் தன்மை வற்றவில்லை என்பதை வரலாறு கணித்துத் தருகிறது.

பசிப்பிணியை விடவும் மனிதத்தைப் பிணித்த மற்றொரு கொடுநோய், வறுமை. அதனால்தான், கொடிது கொடிது வறுமை கொடிது என்று ஔவையார் பாடினார்.

அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றார். எதற்கும் அஞ்சாத இளமையை, வறுமை தின்னத் தொடங்கிவிட்டால் எதிர்க்கும் வேகத்தில் வன்முறை தோன்றும்.எச்சில் கையை உதறினால்கூட, அதில் ஒட்டியிருக்கும் சோறு போய்விடும் என்று ஈயாத கருமிகள் ஆகிய கயவர்கள், தங்கள் தாடைகளை முறுக்கிய கை கொண்டு உடைக்கிறவர்களுக்கே கொடுக்கிறவர்களாக ஆவார்கள் என்று, திருவள்ளுவர் எச்சரிக்கை விடுத்தார்.

அதே நேரத்தில், ஆத்திரத்தில் அத்தகு வன்முறையாளர்களாக, இளைஞர்கள் ஆகிவிடலாகாது என்ற தாயுளத்தால், தன் பசியை விடவும் தன்னை ஈன்ற தாயின் பசியைக் கண்டாலும், அதனை மாற்றுதற்குச் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்றும் அறம் உரைத்தார். பசியினைவிடவும் கொடிய பாவி இந்த வறுமை. அதனால்தான், இதனை,இன்மை என ஒரு பாவி என்றும் எடுத்துக்காட்டினார்.

அரிசி இல்லை என்று அவச்சொல் கூறாதே. அதற்குப் பதிலாக அகரம் இகரம் என்றால் போதும். புரிந்துகொள்வேன் என்று தரித்திரத்தைக் கூடத் தமிழ் கொண்டு சொல்லல் தகாது என்று மனைவிக்கு அறிவுறுத்திய மகாகவி பாரதி, செல்வத்திற்குரிய திருமகளை நோக்கி, நின்னருள் பெற்று, இல்லை என்ற சொல்லை இல்லையாக வைப்பேன் என்று சபதமும் செய்தார்.வசதி படைத்தவன் தரமாட்டான்; வயிறு பசித்தவன் விடமாட்டான் என்று காலங் காலமாய்த் தொடரும் இந்தப் போராட்டத்தைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடி வைத்தார்.

மனிதர் நோக மனிதர் பார்க்கும் இந்த வழக்கத்தால், பகை முளைக்கிறது; மனிதம் சிதைகிறது. அதனால்தான், சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திரத்தன்று புகாரில் வாழும் மூதிற்பெண்டி கூடிக் குலவையிட்டு இந்திரன் ஏவலால் வந்து காவல் செய்யும் பூதத்தை வணங்கி,

பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும், பிணியும், பகையும், நீங்கி;
வசியும், வளனும், சுரக்க 
என்று வாழ்த்தியதாக, இளங்கோவடிகள் பாடுகின்றார்

இப்போது, கொரோனா தீநுண்மிப் பரவலைத் தடுக்கத் தமிழகத் திருக்கோயில்களின் திருவிழாக்களைச் சிறப்போடு நடத்த முடியாது தவிக்கிறோம். இயல்பு நிலைக்கு எப்போது வருவோம் என்று ஏங்கும் மக்களுக்கு எல்லாமும் கிடைக்கிற காலம் வருகிறபோது வரட்டும். அதற்கு முன்னதாக, அவர்களைப் பற்றுகிற தொற்றுநோயான கரோனா தீநுண்மியிடம் இருந்து காப்பது முக்கியம். பசிப்பிணியும் வறுமைநோயும் வந்து வருத்தாமல் மக்களைக் காப்பதும் மிக முக்கியம். வருடந் தவறாமல் வந்து போகின்ற சித்திரைத் திருநாளில், இப்போது, நாம் வைக்கும் விண்ணப்பம், ‘நோயற்ற வாழ்வில் நாம் வாழவேண்டும் என்பதே. அது தொற்றுநோய் மட்டுமல்ல, இடைவெளிவிடாது எல்லாரையும் பற்றி வருத்தும் வறுமை நோயும்தான் என்பதே கவனத்தில் கொள்ள வேண்டிய நேரம் இது.


Add new comment

Or log in with...