கும்பமேளாவிற்கு நீராட வந்த 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று | தினகரன்

கும்பமேளாவிற்கு நீராட வந்த 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று

உத்தர்கண்ட்டின் ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளாவில் புனித நீராடலுக்கு வந்த 30 சாதுக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உத்தரகண்டின் ஹரித்வாரில் துவங்கி, பல மாவட்டங்களில் 1,650 ஏக்கர் பரப்பளவில், கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது.கங்கை நதியில் புனித நீராடுவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், 48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல், மக்கள், கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளது, மாநில அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கும்பமேளாவுக்கு வந்த 2.35 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 2,171 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. ம.பி.,யை சேர்ந்த மகா நிர்வானி அஹாராவின் தலைவர் கபில் தேவ், கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஹரித்துவார் தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.கே. ஜா கூறுகையில், ஹரித்துவாரில் கும்பமேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. குறிப்பிட்ட அகாதாக்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தொற்று ஏற்படவில்லை. அனைத்து அமைப்பை சேர்ந்தவர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து இந்திய அகாதா பிரஷத் அமைப்பு தலைவர் மகந்த் நரேந்திர கிரியும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கும்பமேளாவிற்கு வந்து சென்ற வெளி மாநிலத்தவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


Add new comment

Or log in with...