தெற்கு அதிவேக வீதியில் 8 இற்கும் அதிக வாகனங்கள் விபத்து

தெற்கு அதிவேக வீதியில் 8 இற்கும் அதிக வாகனங்கள் விபத்து-Souhern Expressway Accident-8 Vehicles Collided

- சில மணி நேர போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டது
- உரிய வேகம், தூரத்தை பேணுமாறு சாரதிகளுக்கு ஆலோசனை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 8 இற்கும் அதிக வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்து காரணமாக மாத்தறை திசையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இன்று (14) முற்பகல் 11.15 மணியளவில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம - தொடங்கொட இடைப்பட்ட பகுதியில் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகே சுமார் 10 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மாத்தறை திசையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட பிரயத்தனத்தை அடுத்து, குறித்த திசையிலான போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான இன்று (14) அதிவேக வீதிகளில் பெருமளவான வாகனங்கள் பயணித்து வருவதாகவும் இதன் காரணமாக, வாகனங்களுக்கு இடையில் உரிய வேகம் மற்றும் தூரத்தைப் பேணுமாறு, வீதி அபிவிருத்தி அதிசார சபை (RDA) சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

திடீரென ஒரு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதைத் தொடர்ந்து, பின்னால் வந்த வாகனங்கள் ஓரிரண்டு ஒன்றோடொன்று மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கு பின்னால் வந்த வாகனங்கள் குறித்த விபத்தை தவிர்க்கும் வகையில் திடீரென நிறுத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து இரண்டு வாகனங்கள் மூன்று வாகனங்கள் என, இடைக்கிடை இவ்வாறு வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த விபத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வேன் ஒன்றில் பயணித்தவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளாக தெரிவித்தார்.


Add new comment

Or log in with...