மரக்கறி, பழங்கள் அறுவடையில் வருடாந்தம் ரூ. 20 பில்லியன் இழப்பு

மரக்கறி, பழங்கள் அறுவடையில் வருடாந்தம் ரூ. 20 பில்லியன் இழப்பு-Damages Upon the Vegetable and Fruit Harvest Incur a 20 billion Annual Loss

- அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் விளக்கம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுக்கமைய மரக்கறி மற்றும் பழங்களின் அறுவடையில் 270,000 மெற்றிக் தொன் வீண்விரயமாவதுடன், இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமார் 20 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் (07) நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்தது.

Damages Upon the Vegetable and Fruit Harvest Incur a 20 billion Annual Loss

இந்த அறிக்கையின் அவதானிப்புக்கமைய இலங்கையில் மரக்கறி மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 30- தொடக்கம் 40 வீதம் என்பதும் புலப்பட்டது.

இலங்கையில் வயது முதிர்ந்தவர்களில் 73 வீதமானவர்கள் போதியளவு மரக்கறி மற்றும் பழங்களை நுகர்வதில்லையென்றும், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் மத்தியிலான போஷாக்கின்மை மட்டம் 21 வீதமாகக் காணப்படுவதாகவும் இந்த அறிக்கையில் வெளிப்பட்டது.

ஒட்டுமொத்த விவசாயத் துறையையும் உள்ளடக்கும் வகையில் விவசாய கொள்கையொன்றுக்கான குறைபாடு குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய விவசாயக் கொள்கை தொடர்பான இறுதி வரைபு 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளபோதும் இது இன்னமும் வரைபாகவே காணப்படுகின்றமை தொடர்பிலும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான சந்தையை உள்ளடக்கிய விவசாயக் கொள்கையொன்றுக்கான தேவை காணப்படுவது குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் மரக்கறி மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பை குறைப்பது மற்றும் நியாயமான விலைக்கு அவற்றை விற்பனை செய்வதில் அரசாங்க நிறுவனங்களின் தலையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட செயலாற்று அறிக்கை அரசாங்கக் கணக்குகள் குழுவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், நுகர்வோருக்கும், விவசாயிகளுக்குமிடையில் பாரிய பிரச்சினையாகக் காணப்படும் இடைத்தரகர்களால் அதிக இலாபம் ஈட்டப்படுவதைத் தடுப்பதற்கும், மரக்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இக்குழுவின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர். இலங்கையர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் விளைச்சல் தொடர்பில் விரிவான திட்டம் ஒன்று இன்மையால் விவசாயிகள் தாம் நினைத்த விளைச்சல்களை மேற்கொள்வதால் சில பயிர்கள் மாத்திரம் அதிக விளைச்சல் மேற்கொள்ளப்படுவதாகவும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு தடவை அடுத்த இரு வாரங்களில் மேற்கொள்ளக்கூடிய விளைச்சல்கள் குறித்து முன்னறிவிப்பொன்றை வழங்குவதற்கான நடவடிக்கை யொன்றை மேற்கொள்வது விவசாயிகளுக்கு நன்மையளிப்பதாக அமையும் என கோபா குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக, தயாசிறி ஜயசேகர, சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...