திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் ச்சூலா பிணையில் விடுதலை

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் ச்சூலா பிணையில் விடுதலை-Mrs World Incident-Caroline Jurie & Chula Padmendra Released on Police Bail

திருமதி இலங்கை அழகி போட்டியின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் இன்றையதினம் (08) கைதான, திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் ச்சூலா பத்மேந்திர பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்படுள்ளனர்.

குறித்த விடயம் பற்றி கொழும்பு கறுவதாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்த குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் இன்று (08) பிற்பகல் இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, விடயத்தை சுமூகமாக முடிக்கும் பேச்சுவாரத்தைகளில் பொலிஸார் ஈடுபட்ட நிலையில் அது வெற்றியளிக்காமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த புஷ்பிகா டி சில்வா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

குறித்த சர்ச்சைக்குரிய விடயம் காரணமாக தனக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில், பொது வெளியில் மன்னிப்பு கோருமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு கரோலின் ஜூரி மற்றும் ச்சூலா பத்மேந்திர மறுப்புத் தெரிவித்ததாக, தெரிவித்தார்.

இதன்போது இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு விளக்கமளிக்க வந்த, குறித்த போட்டியின் அமைப்பாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவிக்கையில்,

குறித்த விடயம் தொடர்பில், தனிப்பட்ட ரீதியில் கடிதம் மூலமாக அல்லது தனது வீட்டில் வைத்து வீடியோ பதிவொன்றின் மூலம் மன்னிப்புக் கோருவதாக கரோலின் தெரிவித்ததாகவும் அதனை புஷ்பிகா ஏற்காத நிலையில், இவ்விடயம் தற்போது நீதிமன்றம் வரை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பின்னர் பதிலளிப்பதாக தெரிவித்து, பிணையில் விடுவிக்கப்பட்ட திருமதி உலக அழகி கரோலின் ஜூரி அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...