மூதூர் டயமன் விசேட பாடசாலையின் 5 வருட பூர்த்தி விழா கொண்டாட்டம் | தினகரன்

மூதூர் டயமன் விசேட பாடசாலையின் 5 வருட பூர்த்தி விழா கொண்டாட்டம்

மூதூர் டயமன் விசேட பாடசாaலையின் ஐந்தாவது வருட பூர்த்தி விழா அண்மையில் மூதூர் கலாசார மண்டபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மூதூர் பிரதேச சபை உறுப்பினரும், டயமன் விசேட கல்விப் பிரிவின் அதிபருமான நஸார் பாத்திமா அகீதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது, விசேட தேவையுடைய மாணவர்களுக்கென கல்வி புகட்டும் மூதூர் டயமன் விசேட பாடசாலையின் ஒரு சிறப்பான முன்மாதிரிப் பணியாகும். 

 2016ஆம் ஆண்டு 07மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை ஐந்து வருட காலத்தை பூர்த்தி செய்துள்ளது. இப்பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடானது மூன்று நாள் கல்விச் செயற்பாடாகவும், இரண்டு நாள் வெளிக்கள செயற்பாடாகவும் இருந்து வருகின்றது.

விசேட தேவைகளுடைய தமிழ், முஸ்லிம் மாணவர்களை அரவணைத்து, அடிப்படையான கட்டட வசதிகள் கூட இல்லாமல் வாடகை வீடுகளில் இம்மாணவர்களுக்குரிய கல்விச் செயற்பாட்டை வழங்குவது என்பது தற்காலத்தில் இயலுமான ஓர் காரியம் அல்ல.  அதேசமயம் கற்றல், சித்திரம் வரைதல், விளையாட்டு, வெளிக்கள செயற்பாடுகள் மற்றும் பிள்ளைகளின் வயதிற்கேற்ப தொழிற்கல்வியும் இங்கு இடம்பெற்று வருவதாகவும் டயமன் விசேட பாடசாலையின் அதிபர் நஸார் அகீதா குறிப்பிடுகின்றார்.   இம்மாணவர்கள் அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று இருப்பின் இன்று எத்தனையோ கல்விக்கான உதவிகள் இம்மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும் விளையாட்டு உபகரணம், கற்றலுக்கான உபகரணம், இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் நூல்கள் என எல்லாமே கிடைத்து விடும்.

ஆனால் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளையே இன்னும் எதிர்பார்த்து இப்பாடசாலை இயங்குகின்றது. தற்போது 26மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 03ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

என்.எப். அகீதா அதிபராகவும், டி. வினித்ரா, வி.தக்ஷிகா ஆகியோர் ஆசிரியர்களாகவும்   இம்மாணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை புரிகின்றனர். மேலும் இம்மாணவர்களுக்கு நிரந்தரமான ஒரு கட்டடம் மிக அவசிய  தேவையாக உள்ளது. இந்நிலையில் நலன் விரும்பிகளின் உதவிகள் எமது பாடசாலை மாணவர்களுக்கு ஓரளவு கிடைத்தாலும், பொருளாதார ரீதியில் பெரிதும் நலிவுற்று வாழும் பெற்றோர்களால் முழுத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாது என்று நிருவாகிகள் தெரிவிக்கின்றனர்.   ஐந்து வருட  காலத்தை பூர்த்தி செய்யும் இப்பாடசாலையின் வரலாறு கூறும் சிறிய நூல் காட்சிக்கு வைக்கப்பட்டது. மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவர்களால் வரையப்பட்ட சித்திரங்கள், கைவேலைப் பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. போட்டி நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், வகுப்பறைச் செயற்பாடுகளை பலரும் கண்டு மகிழ்ந்தனர்.    ஐந்தாம் வருட காலத்தை பூர்த்தி செய்யும்கலை நிகழ்ச்சிகள், வரையப்பட்ட சித்திரங்கள், கைவேலைப்பொருட்கள், போட்டி நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், வகுப்பறைச் செயற்பாடுகளை பலரும் கண்டு மகிழ்ந்தனர். இவ்விழா நிகழ்வில் மாணவர்களுக்காக பாராட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா ஒழுங்கமைப்புகளை அங்கு வந்திருந்த அதிதிகள் பாராட்டினர்.பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நிகழ்வுகளை கண்டு மனம் மகிழ்ந்தனர். விசேட தேவையுடைய மாணவர்களின் உளவிருத்திக்கு இது போன்ற நிகழ்வுகள் பெரிதும் பயனுள்ளதாக அமையுமென பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

எஸ்.கஸ்ஸாலி
(மூதூர் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...