விடுமுறை வழங்க கோரும் பிரேரணை நிராகரிப்பு

சபையில் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பிடையில் கடுமையான தர்க்கம்; அமளிதுமளி

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுமுறை வழங்கக்கோரி எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட விடுமுறை பிரேரணை சபாநாயகரினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சபையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த உத்தரவை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் முறையிட நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

இருந்தபோதும் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்துக்கு வராமல் இருப்பது அவரது தனிப்பட்ட காரணத்துக்கு அல்ல. சபாநாயகரான நீங்கள் அதற்கான உத்தரவை வழங்காமல் இருந்ததனாலாகும். அதனால் 3மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு வருகை தராமல் இருப்பதை அடிப்படையாகக்கொண்டு, அவரது பாராளுமன்ற பதவி இல்லாமல் போகும் நிலை இருக்கின்றது. அதனால் அவரது 3மாத விடுமுறை பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

அதற்கு சபாநாயகர் இதுதொடர்பில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட் டு சபை நடவடிக்கையை தொடங்க முற்பட்டபோது, மீண்டும் எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்பின் பிரகாரம் 3மாதத்துக்கு பாராளுமன்றத்துக்கு உறுப்பினர் ஒருவர் வராவிட்டால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போகின்றது.

தற்போது ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்துக்கு வருகை தராமல் 3மாதங்களை முடிவடைய இருகின்றது. அதனால் 3மாதங்கள் வராமை என்ற அடிப்படையில் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வெற்றிடமாக்காமல், இருப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க உத்தரவிடவேண்டும்.அதற்காக நீதிமன்ற உத்தரவு வரும்வரை ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான விடுமுறை பிரேரணையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயர் பதிலளிக்கையில், ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான நீதிமன்ற உத்தரவு இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவருக்கான விடுமுறை பிரேரணையை தற்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த உறுப்பினரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் என்னால் நீக்க முடியாது. சட்டத்தின் அடிப்படையிலே என்னால் செயற்பட முடியும் என்றார்.

இதன்போது எழுந்த சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில்,ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக ஏற்கனவே சபாநாயகரினால் தீர்ப்பொன்று வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் எதிர்க்கட்சிக்கு தேவையான முறையில் சபாநாயகரின் தீர்ப்பை மாற்ற முடியாது என்றார்.

இதனையடுத்து அரச தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.இதன்போது அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சஜித் பிரேமதாசாவை குற்றம் சாட்டி சில விடயங்களை முன்வைத்தார். எனினும் இதற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட சஜித் பிரேமதாச , அந்த விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரினார்.

இது தொடர்பில் தான் நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறினார். இதன் பின்னரும் மஹிந்தானந்த அளுத்கமகே சஜித் பிரேமதாசாவுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...