புத்தர் சிலைக்கு சேதம்; கைதான இந்தியர் வைத்தியசாலையில் மரணம்

புத்தர் சிலைக்கு சேதம்; கைதான இந்தியர் வைத்தியசாலையில் மரணம்-Indian National Arrested For Vandalizing Buddha Statue Died in Remand Custody

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 45 வயதான இந்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

குளியாபிட்டி பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவரான ஒருவரே இவ்வாறு திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர், 47 வயதான திலீப் குமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டி, ரத்மல்வத்த பிரதேசத்தில் ஒரு சில புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கடந்த மார்ச் 19ஆம் திகதி குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு நேற்று (05) இரவு திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், 16 வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளதோடு, இலங்கை பெண் ஒருவரை திருமணம் முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணித்தவரின் உடல் தற்போது வாரியபொல் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற உத்தரவுக்கமைய, PCR பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...