பல உயிர்கள் பலியானமைக்கு பொறுப்பு கூற வேண்டியவர் முன்னாள் ஜனாதிபதி

- ஏப்ரல் 21 தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
- ஈஸ்டர் தின சிறப்பு ஆராதனையின் பின் பேராயர் மெல்கம் ரஞ்சித் கருத்து தெரிவிப்பு

பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதி, ஒரு கட்சியின் தலைவராக எவ்வாறு தொடர்ந்தும் செயற்பட முடியும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய சிலர் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே, நடுநிலையாக அதனுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்றைய தினம் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை இடம்பெற்றிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த பேராயர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துமாறு கோரினார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூர்கிறோம்.

குறித்த தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.


Add new comment

Or log in with...