533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கசிவு | தினகரன்

533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கசிவு

533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்க் கசிவு-Personal Details of 533 million Facebook Users from 106 Countries Leaked

- இந்தியர்கள் 60 இலட்சம் பேரின் தகவல்கள் இதில் உள்ளடக்கம்
- தகவல்களை இலவசமாக வழங்குவதாக சில ஹெக்கர் தளங்கள் அறிவிப்பு

533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின், தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட பல தரவுகள் கசிந்துள்ளதாக, businessinsider இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெக்கிங் தொடர்பான தளம் ஒன்று நேற்றையதினம் (03) குறித்த பயனர்களின் தகவல்களை பொது வெளியில் அம்பலப்படுத்தியுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியன் பயனர்களின் தகவல்களே இவ்வாறு கசிய விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்க பயனர்கள் 32 மில்லியனுக்கும் அதிகமானோரினதும், ஐக்கிய இராச்சியத்தின் 11 மில்லியன், இந்திய பயனர்கள் 6 மில்லியன்  பேரின் தகவல்கள் இதில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் முழுப் பெயர், பயனர் பெயர், தொலைபேசி இலக்கங்கள், அவர்களது இடங்கள், பிறந்த தினம், அவர்கள் பற்றி சிறு குறிப்பு மற்றும் சிலரின் மின்னஞ்சல் முகவரிகளும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், குறித்த தரவுகளில் சில மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்தபோது, அதில் பெரும்பாலனவை உண்மையான பேஸ்புக் பயனர்களின் பயனர் பெயர், தொலைபேசி இலக்கங்களுடன் ஒத்துப் போவதாக,  businessinsider தளம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டு நிலமையின் போது குறித்த தகவல்கள் கசிந்ததாகவும், அது 2019, ஓகஸ்ட் மாதமளவிலேயே சரி செய்யப்பட்டதாகவும், பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனமான Hudson Rock நிறுவனத்தின் இணை நிறுவுனர் அலோன் கல் கருத்துப்படி, குறித்த தரவுகள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஹெக்கர்கள் வட்டங்களில் பரவி வருவதாகவும், அவை பேஸ்புக் தரவுகளுடன் ஒத்துப் போவதாக தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல்களை கசியவிட்டவர்களில் ஒருவரை டெலிகிராம் செயலி மூலம் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்ட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை என, ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பேஸ்புக் பயனர்கள் எதிர்வரும் மாதங்களில் தங்கள் தொலைபேசி எண்கள் அல்லது ஏனைய தனிப்பட்ட தரவைப் பெற்றுள்ள நபர்களின், சமூக பொறியியல் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அலன் கல் எச்சரிக்வை விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...