இறைவரித் திணைக்களத்துக்கு ரூ. 24 கோடி பெறுமதியான 6,878 மறுக்கப்பட்ட காசோலைகள்

இறைவரித் திணைக்களத்துக்கு ரூ. 24 கோடி பெறுமதியான 6,878 மறுக்கப்பட்ட காசோலைகள்-Inland Revenue Department Received 6,878 Dishonored Cheques Worth Rs 240 million-COPA

- உடன் வசூலிக்குமாறு கோபா குழு பணிப்பு

2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் தேசிய இறைவரித் திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்று (dishonored checks)மறுக்கப்பட்ட காசோலைகளின் பெறுமதி 24 கோடி ரூபாய் (24,514,65,383) என பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்துள்ளது. இந்தத் தொகையை வசூலிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அக்குழு, தேசிய இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தது.

கசினோ வியாபார நிறுவனங்கள் செலுத்த வேண்டியுள்ள நிலுவை வரிப்பெறுமதி 2,670 மில்லியன் ரூபாவை வசூலிப்பது தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொடர்பிலும் இங்கு வெளியானது. அத்துடன், 2010ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க நிலுவை வரிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 12ஆம் பிரிவின் கீழ் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரி தகவல்களுக்கு அமைய வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையின் பெறுமதி 14,450 கோடி ரூபா (14,453,73,64,916) என்றும் இங்கு தெரியவந்தது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையில் குழு கூடியபோதே இவ்விபரங்கள் புலப்பட்டன.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து தேசிய இறைவரித் திணைக்களத்தின் கீழ் உள்ள ரமிஸ் கட்டமைப்பை (RAMIS) செயல்படுத்த ஒரு பொதுவான வழிமுறையை தயாரிப்பதை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.


Add new comment

Or log in with...