மியன்மாருக்குள் நுழைய அனுமதி கோருகிறது ஐ.நா

ஐக்கிய நாடுகள் சபை தனது சிறப்புத் தூதர் ஒருவரை மியன்மாருக்குள் அனுமதிக்கும்படி அந்நாட்டு இராணுவத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மியன்மாரில் நிலவும் நெருக்கடியைத் தணித்து, பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கி ஜனநாயகம் திரும்ப, அது உதவியாக இருக்கும் என்று ஐ.நா குறிப்பிட்டது.

மியன்மாரில் அதிகரித்து வரும் வன்முறையைக் கண்டு ஐ.நா தலைமைச் செயலாளர் அதிர்ச்சியுற்றதாக அவரது பேச்சாளர் கூறினார். கொலை, உரிய காரணமின்றி ஒருவரைத் தடுத்துவைத்தல், கைதிகள் சித்திரவதை செய்யப்படுதல் ஆகியவை பற்றி வெளிவரும் தகவல்களை அவர் சுட்டிக்காட்டினார்.

கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்படி பாதுகாப்புச் சபை விடுத்த வேண்டுகோளை, அப்பட்டமாக மீறும் செயல்கள் அவை என்று பேச்சாளர் கூறினார். இதற்கிடையே, யங்கூனில் உள்ள 32 சீனத் தொழிற்சாலைகள் கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து சீனா தனது குடிமக்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறை தெரிவித்துள்ளது.

2 ஊழியர்கள் காயமுற்றதோடு, 37 மில்லியன் டொலர் மதிப்பிலான நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களே அந்தத் தீவைப்புச் சம்பவங்களுக்குக் காரணம் என்று மியன்மாரிலுள்ள சீனத் தூதரகம் குற்றஞ்சாட்டியது.

இதேவேளை, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 138 பேர் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

“ மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் முதலே அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதுவரை மியன்மார் போராட்டத்தில் 138 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்ட்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து யங்கூன், மண்டேலா போன்ற பகுதிகளில் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது” என்று ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


There is 1 Comment

Add new comment

Or log in with...