மேல் மாகாணம்: தரம் 5, 11, 13 மார்ச் 15இல்; ஏனையவை ஏப்ரல் 19இல்

மேல் மாகாணம்: தரம் 5, 11, 13 மார்ச் 15இல்; ஏனையவை ஏப்ரல் 19இல்-Opening Schools in Western Province-March 15-Gr 1-11-13-Apr-All Grades

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை, மார்ச் 15ஆம் திகதி திறக்கும் நடவடிக்கைக்கு அமைய, மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தரம் 5, 11, 13 ஆகியவற்றை மாத்திரம் திறக்க திட்டமிட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்றையதினம் (09) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் எழுத்து மூல பரிந்துரைக்கு அமையவே மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இன்று (09) உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள ஏனைய தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் விடுமுறையின் பின்னர், எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வருடம் தரம் 01 மாணவர்கள் ஏற்கனவே பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மேல் மாகாணங்களில் அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், மேல் மாகாணத்திலுள்ள தரம் 01 முதல் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் 19இல் ஆரம்பிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிலுள்ள ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளைத் திறப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதால், எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி அப்பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.


Add new comment

Or log in with...