தடுப்பூசி பெற்றவர்களுக்கே ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

கொவிட்–19 தொற்றுக்கு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

“ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வருபவர்களுக்கு கொவிட்–19 தடுப்பூசி கட்டாயம் என்பதோடு (நுழைவு அனுமதிக்கு) அது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று” என்று சுகாதார அமைச்சர் கையொப்பம் இட்ட சுற்றுநிருபம் ஒன்றை மேற்கோள்காட்டி ‘ஓகஸ்’ சவூதி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாத்தின் புனிதத் தலங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு பொறுப்பாளராக இருக்கும் சவூதி அரேபியா, ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகளுக்கும் பொறுப்பாக செயற்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டில் ஹஜ் கடமை சுமார் 1,000 சவூதி பிரஜைகள் மற்றும் அங்கிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமை தடுக்கப்பட்டது நவீன வரலாற்றில் முதல்முறையாக அது இருந்தது.

வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒரு தடவை செய்ய வேண்டிய கடமையாக ஹஜ் உள்ளது.


Add new comment

Or log in with...