தென் மாகாண தோட்டங்களில் அவல நிலையில் தமிழர்கள்

மலையக மக்கள் காலம் காலமாக தொடர்ச்சியான துன்பங்களை அனுபவித்துவருகின்றனர். வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வரும் பிரிவினராக மலையக மக்கள் தொடர்ந்தும்காணப்படுகின்றனர்.

பெரும்பான்மைச் சமூகத்தைப் பொறுத்த வரை பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை இலங்கையின் முக்கியமானதோர் சமூகப் பிரிவாகவோ, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்யும் முக்கியமானதோர் பிரிவினராகவோ ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கும் மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை. மலையக சமூகத்தினரிடையே பாரிய மாற்றங்களையும் பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலேயே அரசியல் தலைமைகளும் செயற்பட்டு வருகின்றன. 

மலையக தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டு மக்கள் என்பதை ஏற்றுக் கொள்வதில் இன்னும் அவர்களில் பலர் தயாராக இல்லை. அரசியல்வாதிகளில் பலர் கூட உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போக்கினையே காட்டுகின்றனர்.

பிரதான மலையக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுத்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. குடியுரிமை, சம்பளம், கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை தொழிற்சங்கங்கள் பெற்றுக் கொடுத்துள்ளதை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.

எனினும் தொழிற்சங்கங்கள் தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி மலையக மக்களின் நிலைமைகளை மேம்படுத்த இதை விடக் கூடுதலான பங்களிப்பினைச் செய்திருக்கலாம் என விமர்சிக்கப்படுகின்றது.

சிறுபான்மை மலையக மக்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒரு பகுதியினராக தென்மாகாண மலையகத் தமிழர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் இவர்கள் வாழ்கின்றனர். இம்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் மலையக மக்களின் வாழ்வாதார நிலை ஓரளவு விருத்தி நிலையை அடைந்திருந்தாலும் பொருளாதார, வாழ்வாதார ரீதியில் அம்மக்கள் இன்னும் முழுமையான அபிவிருத்தி நிலையை அடையவில்லை.

தென்மாகாணத்தில் 9தமிழ்ப் பாடசாலைகளே காணப்படுகின்றன. இவற்றில் மாத்தறை மாவட்டத்தில் 6பாடசாலைகளும், காலி மாவட்டத்தில் 3பாடசாலைகளும் அமைந்துள்ளன. அதிபர், ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்பினால் அவை புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். மாணவர்கள் கல்வி நிலையில் படிப்படியாகவே முன்னேற்றமடைந்து வருகின்றனர். இவற்றிலிருந்து பல மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாத்தறை எனும் போது அங்கு பெருந்தோட்டத்துறையினர் வாழ்ந்து வருகின்றமை குறித்தும் சிந்திப்பது அவசியமாகும். இம்மக்கள் வாழ்வில் அவலங்களையே அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து ரீதியிலான பிரச்சினைகள் அதிகம் உள்ளன. கல்வி அபிவிருத்தி, தமிழ் தேசியப் பாடசாலை மற்றும் பொருளாதார விருத்தி நிலைகள் என்பன தேவையானவையாக காணப்படுகின்றன.

காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, உடுகம மற்றும் மாத்தறை மாவட்டத்தில் தெனியாய பிரதேசத்தில் பெரும்பாலான பெருந்தோட்ட மக்கள் அதிகம் வாழ்கின்றனர். உலந்தாவ பகுதிகளிலும் மலையக மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இவர்கள் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாகவும் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். எனினும் மத்திய மலையக பகுதியில் வாழ்கின்ற இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களுடன் நெருங்கிய தொடர்பு இல்லாத நிலையில் அரசியல் அநாதைகளாக அவர்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தென் மாகாணத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வாழ்கின்றமையால் அவர்களில் தமிழர்கள் குறிப்பிட்ட சிலராக இருப்பதனால், இம்மக்களின் கலாசாரம், நடை, உடை, பாவனை பெரும்பான்மை இனத்தவர்களின் சாயலில் காணப்படுகின்றன. இதனால் மலையக சமூகத்திற்கான தனித்துவமான சம்பிரதாயங்கள் மழுங்கி போகின்ற நிலை காணப்படுகின்றது.

மேலும் இப்பிரதேசத்தில் பெருந்தோட்டத்துறை சார்ந்த கம்பனிகள் நிர்வகிக்கின்ற தோட்டங்கள் மாத்திரமன்றி, தனியார் துறையினருக்கு சொந்தமான தோட்டங்களும் காணப்படுகின்றன.

மலையக அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலைக் கைவிட்டு தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் மேம்பாட்டுக்காக கூடுதலான பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும். சாத்தியமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளை மலையக மக்களுக்கு நம்மை தரும் வகையில் பயன்படுத்த வேண்டும்.

பெருந்தோட்ட மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள், மேம்பாட்டுக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். உள்ளூர் பொலிஸ் துறையின் அனுசரணை இதற்குப் பெறப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

ச.யேசுதாசன்...?
(தெனியாய)


Add new comment

Or log in with...